அம்மை யார் எனக்கு…?
மருணீக்கியார் (திருநாவுக்கரசர்) சிறுவராய் இருக்கும்போதே பெற்றோர்களை (புகழனார், மாதினியார்) இழக்கிறார்; தமக்கையாராகிய திலகவதியாரின் ஆதரவில் வாழ்கிறார்.
திலகவதியாரை மணந்துகொள்ளப் பெற்றோர்களால் உறுதி செய்யப்பெற்ற கலிப்பகையார் போர்க்களத்தில் உயிர்துறக்கிறார்; திலகவதியாரும் உயிர்துறக்க முடிவு செய்கிறார்.
“பெற்றோர்களை இழந்த நான் தங்களால் வாழ்ந்துவருகிறேன்; தாங்கள் உயிர்துறப்பதானால் தங்களுக்கு முன்னர் நான் உயிர்துறப்பேன்" என மருணீக்கியார் திலகவதியாரை வணங்கி அழுது வருந்துகிறார்.
“தம்பியார் வாழவேண்டும்; எனவே தாமும் உயிர்வாழ வேண்டும்" என உறுதி கொள்கிறார் திலகவதியார்; தம்பியாரைப் பேணி வளர்க்கிறார்.
எம்மை யாரிலை யானும் உளேனலேன்
எம்மை யாரும் இதுசெய வல்லரே
அம்மை யாரெனக் கென்றென் றரற்றினேற்கு
அம்மை யாரைத்தந் தாராரூர் ஐயரே. (5.7.6)
எம்மை யார்இலை யானும்உ ளேன்அலேன்
எம்மை யாரும் இதுசெய வல்லரே
அம்மை யாரெனக்கு என்றென்று அரற்றினேற்கு
அம்மை யாரைத்தந் தார்ஆரூர் ஐயரே.
`எம் தாயாரும் தந்தையாரும் இலர்; நானும் பிள்ளைப் (பருவத்தினன் ஆதலால் தனித்து வாழும் திறன்) உள்ளவன் அல்லேன்; என் தமக்கையாரும் என்னைப் பேணி வளர்க்க வல்லவரே ஆவார். (ஆயினும் தமக்கையார் உயிர்துறக்கத் துணிந்தமையால்) “எனக்குத் தாய் யார்" என்று பன்முறை கதறிய அடியேனுக்குத் திருவாரூர் இறைவர் தாயாரைத் தந்து அருளினார்.’
எம்மையார் – எம் ஐயார்: பெற்றோர்: ஐயர் என்பது ஐயார் என நீண்டது.
இலை – இல்லை; இலர்
உளேன் அலேன் – உள்ளேன் அல்லேன்
எம்மையார் – எம் ஐயார்: மூத்தவர்: தமக்கையார்
அம்மை யார் – தாய் யார்; தாயார் யார்
அரற்றினேற்கு – அரற்றிய எனக்கு: அரற்றுதல்: அழுதல், கதறுதல்
அம்மையாரை – தாயாரை
ஆரூர் – ஊரின் பெயர்; திருவாரூர்
ஐயர் – தலைவர்: இறைவர்
“எனக்குத் தாயார் யார் என்று கதறினேன்; எனக்குத் தாயாரைத் தந்தார் இறைவர்" என அப்பர் பெருமானார் தம் இளமைக்கால நிகழ்ச்சியை இத்திருப்பாடலில் குறித்தருளுகிறார்.
தாயாரையும் தந்தையாரையும் ஒருங்கே இழந்த பெருமானர், `அம்மை யார் எனக்கு’ என்று அழுததாகச் சொல்கிறார்; `தாய் தந்தை இருவரிலும் பிள்ளையின் அகவளர்ச்சிக்கும் புறவளர்ச்சிக்கும் மிக மிக முக்கியமானவர் தாய். தாயின் இடத்தை நிரப்புவது தந்தைக்கு அரிது; ஆனால் தந்தையின் இடத்தை நிரப்புவது தாய்க்கு எளிது’ என்பது இதனால் தெளிவாகும்.
மருணீக்கியாரைத் தாயாகவும் தந்தையாகவும் காத்து வளர்த்தவர் திலகவதியார்; பின்னாளில் தருமசேனராக விளங்கிய மருணீக்கியாரைத் திருவைந்தெழுத்து ஓதித் திருநீறு அளித்துச் சைவராக்கிய மெய்யாசிரியரும் ஆவார்.
`அம்மையாரைத் தந்தார்’ என்பதன்வழி அப்பர் பெருமானார் திலகவதியாரைத் தாயாகவே சொல்கிறார். தாயாகவும் தந்தையாகவும் மெய்யாசிரியராகவும் நட்பாகவும் உறவாகவும் விளங்கிய தமக்கையாரைக் குறிக்க `அம்மை’ எனும் சொல்லைவிட மேன்மையான சொல் தமிழில் இல்லை ஆதலால் தமக்கு முன்பிறந்த சைவ மாமணியை `அம்மை’ என்றே குறித்தருளுகிறார் தமிழரசர்.
`தந்தையின் இடத்தைத் தாய் நிரப்புவார்; தாயின் இடத்தைத் தமக்கை நிரப்புவார்’ என்கிறார் அப்பர்.
தாய்மை பொலியும் பெண்டிரைப் பெருமானார் எந்த அளவு மதித்துப் போற்றுகிறார் என்பது இதனால் தெளிவாகப் பெறப்படும். சைவப் பேரரசர் ஆகிய திருநாவுக்கரசர் பெருமானார் பெண்மையைப் போற்றுகிறார் எனில் சைவ சமயமே பெண்மையைப் போற்றுகிறது என்றுதான் பொருளாகும்.
பெற்றோரை இழந்த மருணீக்கியாருக்குத் தாயாகத் திலகவதியாரைத் தந்தருளுகிறார் இறைவர்; சைவ உலகுக்கு ஒளிவிளக்காகத் திருநாவுக்கரசரைத் தந்தருளுகிறார் சைவத் தாயான திலகவதியார்.
சிவபெருமானின் அருட்கொடை திலகவதியார்.
திலகவதியாரின் அருட்கொடை திருநாவுக்கரசர்.
- அ. நம்பி
நற்றுணையாவது நமச்சிவாயவே! என்ற பெருமகனை வழங்கிய அம்மையையும், தாய்மையின் அருளையும் அனுபவித்து போற்றி எமக்கும் அளித்ததற்கு நன்றி. சைவமும், வைணமும் தமிழை வளர்த்ததை ஏன் விளம்பரப்படுத்த மாட்டேன் என்கிறார்கள்? நஷ்டம் வருங்கால சந்ததிக்கல்லவா? மொழியை அனுபவிக்க அனுபவிக்க அல்லவா நம்முள் அதன் மகத்துவம் பதியும்? தேவாரமும் திருவாசகமும் இன்றைய இளைஞர்களுக்கு தெரியுமா?
சங்கரன்
அன்பருக்கு,
வாருங்கள் ஐயா.
//சைவமும், வைணமும் தமிழை வளர்த்ததை ஏன் விளம்பரப்படுத்த மாட்டேன் என்கிறார்கள்? நஷ்டம் வருங்கால சந்ததிக்கல்லவா?//
உண்மைதான்; ஆனால் விளம்பரப் படுத்தாவிட்டாலும் வரலாற்று உண்மை மாறாது; மறையாது; என்றும் நிலைத்திருக்கும் ஐயா.
//மொழியை அனுபவிக்க அனுபவிக்க அல்லவா நம்முள் அதன் மகத்துவம் பதியும்?//
உண்மையிலும் உண்மை.
//தேவாரமும் திருவாசகமும் இன்றைய இளைஞர்களுக்கு தெரியுமா?//
தெரிந்திருக்கவேண்டும் ஐயா.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.
They know walter Devaaram only