பொருளடக்கத்திற்கு தாவுக

என்ன ஓசை அது…?

மே 31, 2010

sma04

காலை நேரம்.

ஊர்மக்கள் விழித்து அவரவர் பணியில் ஈடுபடுகின்றனர்.

திருக்கோயிலுக்கு அருகே வளர்ந்துநிற்கும் மரங்களில் சில குரங்குகள்.

மரங்களிலேயே இருந்தால் பசிக்கு என்ன செய்வது?

கீழே இறங்கி வருகின்றன.

தரையில் தீனி கிடைக்கும்; தேடிக் கிடைத்தவற்றைக் குட்டிகளுக்குக் கொடுத்துத் தாமும் தின்கின்றன.

குட்டிகள் விளையாடிக்கொண்டிருக்கின்றன.

குரங்குகளின் உற்சாகத்துக்குக் குறைவில்லை.

அப்போது அழகிய மகளிர் சிலர் திருக்கோயிலுக்கு வருகின்றனர்.

மகிழ்ச்சியும் மகிழ்ச்சியில் பிறக்கும் சிரிப்புமாக வருகின்றனர்.

அவர்களுக்குச் சிரிக்கவும் தெரியும்; சிறப்பாக நடனம் ஆடவும் தெரியும்.

ஆடத் தொடங்குகின்றனர்; சுற்றிச் சுழன்று ஆடுகின்றனர்.

ஆட்டத்துக்கு ஏற்ப முழவுகளின் ஓசை ஓங்கி எழுகிறது.

அதிரும் முழவோசையும் இனிய நடனமும் தொடர்கின்றன.

குரங்குகளுக்குக் குழப்பம்.

திருவையாறு மழைவளம் மிக்கது.

இடி முழங்குவதும் தொடர்ந்து மழை பொழிவதும் அங்கு வழக்கம் ஆகும்; குரங்குகளுக்குத் தெரியும்.

முழவோசையைக் கேட்டதும் இடியோசையோ எனக் குரங்குகள் மயங்குகின்றன.

மழை பொழியுமோ என்று அஞ்சுகின்றன.

sma02 மழை பெய்தால் நனைந்துவிட நேருமே? தாங்கள் நனைந்தாலும் குட்டிகள் நனையக் கூடாதே! ஒதுங்குவதற்கு நேரம் வேண்டுமே?

ஆனாலும் உறுதி செய்துகொள்ளவேண்டும்.

உயர்ந்துநிற்கும் மரங்களில் சில குரங்குகள் ஏறுகின்றன; ஏறி உச்சாணிக் கொப்புகளை அடைகின்றன.

வானில் தவழும் முகிலை அங்கிருந்து பார்க்கின்றன.

அந்தக் குரங்குகளுக்குத் தெரியும்; முகில் கறுத்திருந்தால் திண்ணமாக மழை பெய்யும் என்பது அவற்றுக்குத் தெரியும்.

வானில் வெண்முகில்கள்; கார்முகில் ஏதும் இல்லை.

குரங்குகளுக்குக் குழப்பம் தீர்கிறது; கவலை மறைகிறது.

புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவழிந்திட் டைம்மேலுந்தி
அலமந்த போதாக அஞ்சேலென் றருள்செய்வான் அமருங்கோயில்
வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழையென்றஞ்சிச்
சிலமந்தி அலமந்து மரமேறி முகில்பார்க்குந் திருவையாறே. (1.130.1)

வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழையென்றஞ்சிச்
சிலமந்தி அலமந்து மரமேறி முகில்பார்க்குந் திருவையாறே.

(நடனக்கலையில் தேர்ந்த பெண்கள் நடனம் ஆட, ஆடலுக்கேற்றபடி முழவுகள் அதிர, அந்த முழவோசை கேட்டு இடியோசை என்று நினைத்த சில மந்திகள் மழை வருமோ என்று அஞ்சி மயங்கி மரங்களில் ஏறி முகிலைப் பார்க்கும் திருவையாறு ஆகும்.)

வலம்வந்த – தேர்ந்த
மடவார்கள் – பெண்கள்
நடம் – நடனம்
முழவு – முரசு
மந்தி – குரங்கு; பெண்குரங்கு
அலமந்து – மயங்கி
முகில் – மேகம்

திருஞானசம்பந்தர் திருப்பாடலில் ஓர் அழகிய காட்சி.

(வளமை – 14.09.2009)

- அ. நம்பி

2 மறுமொழிகள் leave one →
  1. மே 31, 2010 6:08 பிற்பகல்

    IYARKAIYAI SAMBANDHAR ANUBAVITHTHU PAADIYULLAAR .’” VAANARANGAL KANIKODUTHTHU MANTHIYODU KONJUM “‘YENDRA COURTAALA KURAVAJI NINAIVUKKU VARUKIRATHU!!IYARKAIYUDAN IYANTHU VAALNTHANAR NAMATHU MUNNOR !AANAL NAAM ????

  2. மே 31, 2010 6:46 பிற்பகல்

    அன்பருக்கு,

    //IYARKAIYAI SAMBANDHAR ANUBAVITHTHU PAADIYULLAAR .//

    திருஞானசம்பந்தர் அருளிச்செய்த திருப்பாடல்களில் உள்ளத்தை ஈர்க்கும் அற்புதமான இயற்கை வருணனைகள் கொட்டிக் கிடக்கும் ஐயா.

    //’” VAANARANGAL KANIKODUTHTHU MANTHIYODU KONJUM “‘YENDRA COURTAALA KURAVAJI NINAIVUKKU VARUKIRATHU!!//

    அருமையான பாடலைத்தான் நினைவுகூர்ந்து சொல்கிறீர்கள்.

    //IYARKAIYUDAN IYANTHU VAALNTHANAR NAMATHU MUNNOR !AANAL NAAM ????

    உண்மைதான் ஐயா. ஆனால் என்ன செய்வது? `காலமாற்றம்’ என்னும் கட்டாய மாற்றத்துக்கு நாம் கொடுக்கும் விலை…!

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 41 other followers