குச்சித் தாத்தா சொன்ன கதை!
அப்போது நான் சிறுவன்; ஒத்த அகவையினரான சிறுவர்கள் சிலர் உடன் இருந்தனர்.
உண்ணும் நேரம், உறங்கும் நேரம், பள்ளி செல்லும் நேரம் தவிர எஞ்சிய நேரமெல்லாம் குறும்பு செய்துகொண்டிருப்பதே எங்கள் முழுநேர வேலை.
எல்லாமே சிறுபிள்ளைத்தனமான குறும்புகள் என்றாலும் சில வேளைகளில் எல்லைமீறிப் போனதும் உண்டு.
தேள், செய்யான், பாம்பு முதலியவற்றை விரட்டிப் பிடித்து `விளையாடுவது’ மிகவும் பிடிக்கும்.
குளவிகளைத் தேடிப் பிடித்துக் கொடுக்கைப் பிடுங்கிவிட்டு உள்ளங்கையில் வைத்து மூடிக்கொள்வதும் தேனீக்கூட்டைக் கல்லெறிந்து கலைத்துவிட்டு ஓடுவதும் அவ்வப்போது நாங்கள் விளையாடும் `விளையாட்டுகள்’ ஆகும்.
இவற்றுக்காக இல்லத்தாரிடம் அடிக்கடி தண்டனையும் கிடைக்கும்.
தண்டனையைப்பற்றி என்ன கவலை? அப்படியே உதறிவிட்டு எங்கள் வேலையைத் தொடர்வது வழக்கம்.
ஊரில் பெரியவர் ஒருவர் இருந்தார். எல்லாருக்கும் அவர் தாத்தா. மற்றப் பெரியவர்கள்கூட அவரைத் தாத்தா என்றுதான் அழைப்பார்கள். மிக மிக ஒல்லியாக இருப்பார். நாங்கள் அவரைக் `குச்சித் தாத்தா’ என்று சொல்வோம்.
குறும்பு செய்வது எங்கள் முழுநேர வேலையென்றால் எங்களைக் கண்காணிப்பதுதான் அவரின் முழுநேரத் தொழில்.
வாய்க்கால் அருகிலோ ஆற்றங்கரையிலோ சாலை ஓரத்திலோ வழக்கம்போல ஏதாவது செய்துகொண்டிருப்போம்.
எப்படித்தான் தாத்தாவுக்கு மூக்கு வேர்க்குமோ? எங்கள் பக்கத்தில் வந்து நிற்பார்.
என்ன செய்வார் என்று எங்களுக்குத் தெரியும். நாங்கள் ஓட்டம் பிடிப்பதற்குள் யாராவது ஒருவனை எட்டிப் பிடித்துவிடுவார். எல்லாரும் அப்படியே நின்றுவிடுவோம்.
சிக்கியவன் காதைப் பற்றித் திருகுவார். அகவை கூடினாலும் கையின் வலுவுக்குக் குறைவில்லை. ஏழு ஊருக்குக் கேட்குமாறு அவன் கத்துவான். எவ்வளவு கத்தினாலும் காதை விடமாட்டார். கண்ணீர் வரவேண்டும்; பிறகுதான் விடுவார்.
தாத்தாவிடம் சிறப்பான சில குணங்கள் இருந்தன. ஒரு தடவைக்கு ஒருவனுக்குத்தான் தண்டனை கொடுப்பார். மற்றவர்களை ஒன்றும் செய்யமாட்டார். நாங்கள் செய்த குறும்பை எங்கள் இல்லத்தாரிடம் சொல்லமாட்டார். சொன்னால் எங்களுக்கு மேலும் தண்டனை கிடைக்கும் என்று அவருக்குத் தெரியும். காதைத் திருகிய பின்னர் கதை சொல்வார். எல்லாமே ஒழுக்கம் சார்ந்த கதைகள்.
ஒருமுறை ஏதோ செய்து சிக்கிக்கொண்டோம். குச்சித் தாத்தா ஒரு கதை சொன்னார். சிறிது கொச்சையான கதை. தாத்தா சொன்னவாறே சொல்லாமல் என் முறையில் சொல்கிறேன்.
ஒற்றையடி வழியோரத்தில் செடியின் அருகில் சிறுவன் ஒருவன் வெளிக்கிருந்து கொண்டிருந்தான்.
கையில் ஒரு வெள்ளரிக்காய்; வெளிக்கிருந்தவாறே வெள்ளரிக்காயையும் தின்றுகொண்டிருந்தான்.
அவ்வழியே பெரியவர் ஒருவர் வந்தார். சிறுவனைப் பார்த்தார்.
“அப்பா, வெளிக்கிருந்துகொண்டே வெள்ளரிக்காயைத் தின்னக்கூடாது. வெளிக்கிருந்துவிட்டு வெள்ளரிக்காயைச் சாப்பிடு; இல்லையென்றால் வெள்ளரிக்காயைச் சாப்பிட்டுவிட்டு வெளிக்கிரு. இரண்டையும் ஒன்றாகச் செய்யாதே!” என்றார்.
சிறுவன் அவரை நிமிர்ந்து பார்த்தான்.
“நான் தொட்டுக்கொண்டு தின்பேன்; உங்களுக்கு என்ன?” என்று சொல்லிவிட்டுத் தன் செயலைத் தொடர்ந்தான்.
ஏதும் சொல்லத் தோன்றாமல் பெரியவர் அவ்விடத்தைவிட்டு அகன்றார்.
இரு தலைமுறைகளுக்கு முன்னர் தாத்தா சொன்ன இந்தக் கதை இன்றும் செல்லுபடி ஆகும் என்று நினைக்கிறேன்.
ஏனெனில் அந்தச் சிறுவனின் தன்மை கொண்டவர்கள் சிலர் இன்றும் நம் இனத்தில் உள்ளனரோ என்று சில வேளைகளில் எண்ணத் தோன்றுகிறது.
(நனவுகள் – 04.09.2009)
- அ. நம்பி
நல்ல பதிவு …
அன்பருக்கு,
வாருங்கள் ஐயா.
//நல்ல பதிவு …//
மகிழ்ச்சி ஐயா.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.
Congrats!
Your story titled ‘குச்சித் தாத்தா சொன்ன கதை!’ made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 24th May 2010 06:58:45 PM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/259351
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
//ஏனெனில் அந்தச் சிறுவனின் தன்மை கொண்டவர்கள் சிலர் இன்றும் நம் இனத்தில் உள்ளனரோ என்று சில வேளைகளில் எண்ணத் தோன்றுகிறது.//
நம் இனமா. உங்கள் இனமா?
அன்பருக்கு,
//நம் இனமா. உங்கள் இனமா?//
விளங்கவில்லை ஐயா; சற்று விளக்கமாகக் கேட்கலாமே!
ஆரியர்களின் தனிப்பெரும் தலைவரே . இந்த இடுகை யாரைத்தாக்கி எழுதினது
அன்பருக்கு,
//ஆரியர்களின் தனிப்பெரும் தலைவரே .//
அட்டா, இப்படி ஓர் `உயர்ந்த’ விருது கொடுத்து நீங்கள் என்னைக் `கெளரவிப்பதற்கு’ என்ன காரணம் என்று என்று நான் தெரிந்துகொள்ளலாமா ஐயா?
//இந்த இடுகை யாரைத்தாக்கி எழுதினது//
பொதுவாக ஏதேனும் எழுதினால் `யாரையோ தாக்கி’ எழுதுவதாக ஏன் எடுத்துக்கொள்கிறீர்கள்?