பொருளடக்கத்திற்கு தாவுக

மயங்கிக் கிடந்த காலம்!

மே 13, 2010

kpr01 kpr03

யிலுந்தொறும் சுவைதரும் பைந்தமிழ் இலக்கியங்களுள் கலிங்கத்துப்பரணியும் ஒன்று. செங்கரும்பின் அடிப்பாகம் ஒத்தது புலவர் செயங்கொண்டாரின் தமிழ். முழுதும் இனிக்கும்; தெவிட்டாமல் இனிக்கும்.

கலிங்கப் போருக்குச் சென்ற வீரர்கள் காலம் தாழ்த்துத் திரும்புகின்றனர். மகளிர் ஊடிக் கதவை அடைத்துக்கொள்கின்றனர்.

ஊடல் இருந்தாலும் தாம் சொல்லவிருக்கும் கலிங்கப்போரின் சிறப்பைக் கேட்டு மகிழவேனும் கதவைத் திறக்குமாறு மகளிரை வேண்டிப் பாடுகிறார் புலவர்.

முருகிற் சிவந்த கழுநீரும்
   முதிரா இளைஞர் ஆருயிரும்
திருகிச் செருகும் குழல்மடவீர்,
   செம்பொற் கபாடந் திறமினோ.

பேணுங் கொழுநர் பிழைகளெலாம்
   பிரிந்த பொழுது நினைந்தவரைக்
காணும் பொழுது மறந்திருப்பீர்,
   கனப்பொற் கபாடந் திறமினோ.

வருவார் கொழுநர் எனத்திறந்தும்
   வாரார் கொழுநர் எனவடைத்தும்
திருகும் குடுமி விடியளவும்
   தேயும் கபாடந் திறமினோ.

இத்தகு பாடல்கள் பல கொண்டது `கடைதிறப்பு’ எனும் பகுதி. (கடை, கபாடம் – கதவு, வாயில்)

பழந்தமிழ்ப் புலவர்களைப் பயின்று  அவர்களின் தமிழில் மயங்கிக் கிடந்த காலம் ஒரு காலம்; அஃது இனிமையான காலம்.

அப்போது இவன் இயற்றிய ஒரு நகைச்சுவைப் பாடல்:

kpr08 கபாடம் திறமினோ!

நேயப் பெண்டிர் புதுச்சேலை
    நித்தம் வாங்கின் அதுபார்த்து
வாயைப் புதைக்கும் மடநல்லாய்,
    மரத்துக் கபாடந் திறமினோ!

மர்மக் கதைகள் இராப்படித்து
    மயங்கித் துயிலுக் குறவானோய்,
தர்மம் ஆகும், உடனெழுந்து
    தயவாய்க் கபாடந் திறமினோ!

தெருவே உறங்கத் திருடரொடு
    தெருநா யுறங்க, உடனுறங்கும்
திருவே, உறக்க நாயகியே,
    திறவாக் கபாடந் திறமினோ!

மூட்டைக் கடிக்கும் கொசுக்கடிக்கும்
    முற்றாய்க் கவலை கொள்ளாமல்
வீட்டை மறந்தே உறங்குகின்றோய்,
    விரியக் கபாடந் திறமினோ!

கூதல் நடுக்கக் குளிரொடுக்கக்
    கூவி அழைத்தும் உறங்குதியோ?
நோதல் அறியாச் செவியுடையாய்,
    நுழையக் கபாடந் திறமினோ!

இமையில் தையல் இட்டனையோ?
    இல்லை, பசையால் ஒட்டினையோ?
அமைதி போதும், கறையான்கள்
    அரித்த கபாடந் திறமினோ!

(நள்ளிரவுக் காட்சிக்குச் சென்றுவந்த கணவன்  பாடியது.)

(தமிழ்நேசன் – 26.4.1964)

(குறிப்பு: அக்காலத்தில் புதிய திரைப்படங்களை முதலில் சனிக்கிழமை இரவு மணி பதினொன்றரைக்குத் திரையிடுவார்கள். இதனை `நள்ளிரவுக் காட்சி’ என்று அப்போது சொல்வோம். வழக்கமான காட்சிகளுக்காகக் காத்திருக்கப் பொறுமை இல்லாதவர்கள் இந்தக் காட்சிக்குக் கட்டாயம் செல்வார்கள். அதிகாலை இரண்டு மணிக்குப் படம் முடியும்.)

- அ. நம்பி

4 மறுமொழிகள் leave one →
  1. மே 14, 2010 11:26 மு.பகல்

    அது அந்தக் காலம்
    இன்று எங்கு வேண்டுமானாலும்
    எது வேண்டுமானாலும்
    எப்போது வேண்டுமானாலும்
    யாருக்கு வேண்டுமானாலும்
    கிடைக்கும்

  2. மே 14, 2010 12:10 பிற்பகல்

    அன்பருக்கு,

    `அந்த’ மயக்கத்துக்கு ஆளாகும் பழக்கம் என்னிடம் அறவே இல்லை ஐயா.

  3. மே 14, 2010 7:34 பிற்பகல்

    நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு….

  4. மே 14, 2010 7:54 பிற்பகல்

    அன்பருக்கு,

    //நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு….//

    அவர்பொருட்டு…?

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 41 other followers