இரண்டு பொடிக்கதைகள்…!
1. வழிவிட்டால் என்ன?
ஊருக்குச் சற்றுத் தள்ளி ஒரு சிறிய ஆறு.
சாய்ந்து விழுந்த ஒரு தென்னைமரத்தை அந்த ஆற்றின் குறுக்கே போட்டிருந்தார்கள்.
ஆற்றைக் கடக்க அதுதான் பாலமாகப் பயன்பட்டது.
ஆனால் அதில் ஒரு சிக்கலும் இருந்தது.
ஒரே நேரத்தில் இருவர் எதிரெதிராக வந்தால் ஒருவரை ஒருவர் கடந்துசெல்ல முடியாது.
யாரேனும் ஒருவர் திரும்பிக் கரைக்குச் சென்றாகவேண்டும்; பாலத்தை மற்றவர் கடந்தவுடன் மீண்டும் பாலத்தில் ஏறிக் கடக்கவேண்டும்.
அந்தத் தென்னைமரப் பாலம் அவ்வளவு குறுகலானது; ஊரில் இது எல்லாருக்கும் தெரியும்.
ஒரு நாள் பெரியவர் ஒருவர் அந்த ஆற்றைக் கடக்கப் பாலத்தில் ஏறி நடந்தார்; பாலத்தின் முக்கால் பகுதியைக் கடந்துவிட்டார்.
அதே நேரத்தில் எதிரே இளைஞன் ஒருவன் பாலத்தில் ஏறி நடக்கத் தொடங்கினான்.
அவன் அடாவடியான ஆள்; யாரையும் மதிப்பதில்லை; எல்லாரையும் எடுத்தெறிந்து பேசுவான். அவனுடைய குணம் ஊராருக்குத் தெரியும்.
பெரியவரும் அவனும் பாலத்தில் எதிர்ப்பட்டார்கள்.
விலகிச் செல்ல வழியில்லை.
“தம்பி, அன்புகூர்ந்து எனக்கு வழிவிடுங்கள்! இன்னும் சில அடி தொலைவுதான்; நான் பாலத்தைக் கடந்துவிடுவேன்!” என்றார் பெரியவர்.
“முட்டாள்களுக்கு வழிவிடும் பழக்கம் எனக்கு இல்லை!” என்றான் அந்த இளைஞன்; அவன் குரலில் ஆணவம் வழிந்தோடியது.
பெரியவர் ஏதும் சொல்லாமல் திரும்பி வந்த வழியே நடக்கத் தொடங்கினார்.
“ஏன் திரும்பிவிட்டீர்கள்?” என்று ஏளனமாகக் கேட்டான் அவன்.
“முட்டாள்களுக்கு வழிவிடும் பழக்கம் எனக்கு உண்டு!” என்று சொல்லிக்கொண்டே நடந்தார் பெரியவர்.
2. எளிய காரணம்தான்…!
ஒரு குருகுலம்; மாணாக்கர் பலர் அங்குத் தங்கி இருந்தனர்; கல்வி பயின்றனர்.
அவர்களுக்குக் கற்பித்த குரு மிகக் கற்றவர்; மாணாக்கர்கள் சிறந்த கல்வி பெறவேண்டும் என்ற உயரிய எண்ணம் கொண்டவர். பல கலைகளையும் முறையாகக் கற்பித்தார்.
புலவர் ஒருவர் மகனும் குருகுலத்தில் கல்வி கற்றான்.
இயல்பிலேயே கூர்த்த அறிவு கொண்டவன் அவன்; குரு கற்பிப்பனவற்றைக் கவனமாகக் கற்றான். தலைமாணாக்கனாக விளங்கினான்.
காலம் ஓடியது; பல ஆண்டுகள் கழிந்தன.
அவன் கல்வி நிறைவு எய்தியது.
அவன் தன் இல்லம் திரும்பும் நாள் வந்தது.
குருவைப் பணிந்து வணங்கினான்; தன் நன்றியறிதலைத் தெரிவித்துக்கொண்டான்.
“குருவே, அனைத்துக் கலைகளையும் எனக்குக் கற்பித்து அருளினீர்கள்; உங்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்; என் உயிருள்ள மட்டும் உங்களை நான் மறவேன். இன்று நான் இல்லம் செல்கிறேன்; இன்னும் எனக்குக் கூறவேண்டுவது ஏதேனும் இருந்தால் அருள்கூர்ந்து கூறி அருளவேண்டும்!” என்று பணிவாக வேண்டினான்.
“கற்பிக்க வேண்டுவன அனைத்தையும் உனக்குக் கற்பித்துவிட்டேன்; இனி உனக்குக் கற்பிக்க ஏதும் இல்லை. மகிழ்ச்சியாக இல்லம் செல்; உலக வாழ்க்கையைத் தொடங்கு; உனக்கும் உன் குடும்பத்தாருக்கும் சமுதாயத்துக்கும் பயனுள்ள நல்ல மனிதனாக வாழத் திருவருள் உனக்குத் துணைநிற்குமாக!” என்று உள்ள நிறைவோடு அவனை வாழ்த்தினார் குரு.
மீண்டும் வணங்கி எழுந்தான் மாணாக்கன்.
"இனிச் சொல்லவேண்டுவது ஒன்றே ஒன்றுதான் உண்டு; சொல்கிறேன், கேட்டுக் கொள். வாழ்வில் என்றும் இதனைக் கடைப்பிடி. எக்காலத்திலும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் முட்டாள்களோடு விவாதம் செய்யாதே!” என்றார் குரு.
“என்ன காரணம் என்று கூறி அருளவேண்டும்!” என்று வினாவினான் மாணாக்கன்.
“காரணமா? எளிய காரணம்தான். முட்டாள் ஒருவனோடு நீ விவாதம் செய்வாயானால் உங்கள் இருவருள் யார் முட்டாள் என்பது மற்றவர்களுக்குத் தெரியாமல் போய்விடும்!” என்று விடையிறுத்தார் குரு.
- அ. நம்பி
நல்ல கருத்து நிறைந்த கதைகள்,
அன்பருக்கு,
//நல்ல கருத்து நிறைந்த கதைகள்,//
இப்படிப்பட்ட கதைகள் தேவை என்று தோன்றியது; வெளியிட்டேன்.
அருமை
அன்பருக்கு,
//அருமை//
கருத்துக்கு நன்றியறிதல் உடையேன்.
நல்ல கதைகள். ஆழமான அர்த்தமுள்ள கருத்துகளைக் கொண்டுள்ளன. காலத்திற்கும் தேவையான கருத்துகள். தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள்.
அன்பருக்கு,
//நல்ல கதைகள். ஆழமான அர்த்தமுள்ள கருத்துகளைக் கொண்டுள்ளன. காலத்திற்கும் தேவையான கருத்துகள்.//
கருத்துக்கு நன்றியறிதல் உடையேன்.
” adi முட்டாள்களுக்கு வழிவிடும் பழக்கம் எனக்கு உண்டு!” என்று சொல்லிக்கொண்டே நடந்தார் பெரியவர்.
…..endru irunthaal innum nandraaga irunthirukkum enbathu adiyenin elimaiyaana karuthu!
Immathiriyana khataikal todhara vendum…
அன்பருக்கு,
//Immathiriyana khataikal todhara vendum…//
அவ்வப்போது பொடிக்கதைகள் வெளியிடும் எண்ணம் உண்டு ஐயா.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.
அன்பருக்கு,
//” adi முட்டாள்களுக்கு வழிவிடும் பழக்கம் எனக்கு உண்டு!” என்று சொல்லிக்கொண்டே நடந்தார் பெரியவர்.
…..endru irunthaal innum nandraaga irunthirukkum enbathu adiyenin elimaiyaana karuthu!//
நீங்கள் சொல்வதும் நன்றாகத்தான் இருக்கிறது ஐயா.