பொருளடக்கத்திற்கு தாவுக

சைவத்தில் சாதி

மார்ச் 19, 2010

ss01

(திருமுறை விளக்கம்: 21)

சாதிக்கொள்கை சைவக்கொள்கை அன்று.

சாதி அமைப்பு சைவம் உருவாக்கியது அன்று.

சாதிப் பாகுபாடு சைவம் செய்தது அன்று.

சாதிவெறி சைவநெறி அன்று.

`குலம் ஒன்று; இறைவர் ஒருவர்’ என்பது சைவத்தின் அடிப்படைக் கொள்கை.

இக்கொள்கைக்கு மாறான எக்கொள்கையும் சைவத்துக்கும் புறம்பான கொள்கையே ஆகும்.

சாதிப் பாகுபாட்டைச் சைவம் நெடுகிலும் எதிர்த்தே வந்துள்ளது.

சாதியமைப்பு என்பது எங்கோ வெகுதொலைவில் யாரிடமோ உள்ள ஒன்றாக இருந்திருந்தால் அதனை எதிர்க்க வேண்டிய கட்டாயம் சைவச் சான்றோருக்கு ஏற்பட்டிருக்காது.

தங்களைச் சைவர்கள் எனச் சொல்லிக்கொண்டே சிலர் சாதிக்கொள்கையைக் கைக்கொண்டதோடு அன்றியும் அதனைச் சைவத்திலும் பயில முயன்றனர்.

சாதிப் பாகுபாட்டால் சமயத்தையும் சமுதாயத்தையும் சீரழிக்கத் தலைப்பட்டனர்.

உடலில் ஓரிடத்தில் தோன்றும் புற்றுநோய் மெல்ல மெல்ல வளர்ந்து பரவுவதைப்போன்று சமுதாயத்தில் வேரோடிக் கிளைத்தது சாதி.

உயர்ந்த சாதி, மிக உயர்ந்த சாதி, மிக மிக உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி, மிகத் தாழ்ந்த சாதி, மிக மிகத் தாழ்ந்த சாதி என வளர்ந்தது சாதியெனும் புற்று.

சாதிப் பாகுபாடு என்று பரவத் தொடங்கியதோ அன்றே சைவச் சான்றோர் அதனை எதிர்க்கத் தொடங்கினர்.

சாத்தி ரம்பல பேசும் சழக்கர்காள்
கோத்தி ரமும்குல மும்கொண்டு என்செய்வீர்
பாத்தி ரம்சிவ மென்று பணிதிரேல்
மாத்தி ரைக்குள் அருளுமாற் பேரரே.
(5.60.3)

சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்
கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர்
பாத்திரம் சிவம் என்று பணிதிரேல்
மாத்திரைக்குள் அருளும் மாற்பேரரே.

`சாத்திரங்கள் பலவற்றைப் பேசும் அறிவற்றவர்களே! கோத்திரமும் குலமும் கொண்டு என்ன செய்வீர்கள்? வணங்கப்படுதற்கு உரிய பொருள் சிவபரம்பொருளே என்று கொண்டு வணங்குவீர்களாயின் திருமாற்பேற்று இறைவர் கணப்பொழுதுக்குள் அருளுவார்.’

சாத்திரம் – சமய இலக்கண நூல், பொருள்நூல்
சழக்கர் – அறிவற்றவர், பொய்யர், தீயவர்
குலம் – சாதி
கோத்திரம் – வழிவழி, வமிசம்
பாத்திரம் – வணங்கப்படுதற்கு உரிய பொருள், கொள்ளுதற்கு உரிய பொருள்
பணிதிரேல் – வணங்குவீர்களானால்
மாத்திரை – கணப்பொழுது, இமைப்பொழுது, நொடிப்பொழுது
அருளும் – அருளுவார்
மாற்பேறு – ஊரின் பெயர்: திருமாற்பேறு
மாற்பேறர் – திருமாற்பேற்றில் எழுந்தருளியுள்ள இறைவர்

அறிவு நிலையில் நின்று சமயத்தை ஆராய்ந்து இலக்கணம் கூறும் நூல் பொருள்நூல் ஆகும்; பொருள்நூலே சாத்திரம் எனப்படும்.

திருமூலர் அருளிய `திருமந்திரம்’, மெய்கண்டார் அருளிய `சிஞானபோதம்’ முதலிய நூல்கள் பொருள்நூல்கள்.

சைவ சமயத்தின் பொருள்நூல்கள் யாவும் மெய்யறிவு நூல்களே ஆகும்.

மெய்யறிவு நூல்கள் அறிவுக்கே முதலிடம் தருவன.

அறிவதற்கு அரிய கடவுளையும், கடவுளை அடைவதற்கு உரிய வழியான அன்பையும்கூட மெய்யறிவு நூலாசிரியர்கள் அறிவு நிலையில் நின்றே ஆராய்ந்து விளக்க முற்படுவார்கள்.

அறிவு நூல்களாகிய சாத்திரங்களைப்பற்றிப் பேசுபவர்கள் அறிவுக்குப் பொருந்துவனவற்றையே பேசவேண்டும்; அறிவுக்குப் பொருந்துவனவற்றையே செய்யவேண்டும்.

ss03 அறிவு நூல்களைப்பற்றியும் பேசிக்கொண்டு அறிவுக்குப் பொருந்தாக் கொள்கைகளையும் கைக்கொள்வது அறியாமையே ஆகும்.

சாதிப் பாகுபாடு அறிவுக்குப் பொருந்தும் கொள்கையோ?

சாத்திரமும் பேசிக்கொண்டு சாதியையும் விடாது பற்றிக்கொண்டு வாழ்வோர் அறிவற்றோரே ஆவர்.

அத்தகையோரையே `சழக்கர்காள்’ என விளிக்கிறார் அருட்பெரும் சான்றோராகிய திருநாவுக்கரசர் பெருமானார்.

நூல்களைக் கசடறக் கற்பதும் கற்றவற்றுக்கு ஏற்ப வாழ முயல்வதும் அறிவு உடையவர்களின் இயல்பு.

நூல்களைக் கற்பது பேசுவதற்கு மட்டுமே என எண்ணுவது அறிவு இல்லாதவர்களின் தன்மை.

சாத்திரங்களைப் பற்றி வாழ முயற்சி செய்யாமல் சாத்திரங்களைப்பற்றிப் பேசி வாழ்பவர்களைச் "சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்" என அழைப்பதன்வழி, அறிவுக்குப் பொருந்தாத அவர்களின் பேச்சையும் செயலையும் தனித்துச் சுட்டிக் காட்டுகிறார் பெருமானார்.

`சழக்கு’ எனும் சொல் அறியாமை, பொய், பயனின்மை, குற்றம், தீமை எனப் பல பொருள் தரும்.

சாதிப் பாகுபாடு என்பது அறியாமையின் விளைவு, உண்மைக்கு மாறானது, பயன் இல்லாதது, குற்றம் மிகுந்தது, தீமை விளைவிப்பது என ஒருசேரக் குறிக்கும் பொருட்டே  இத்திருப்பாடலில் `சழக்கர்’ எனும் சொல்லை அப்பர் பெருமான் ஆளுகிறார் எனக் கொள்ளலாம்.

நூல்களைக் கற்காமல் அறிவுக்குப் புறம்பாகப் பேசுபவர்களும், நூல்களைக் கற்றிருந்தும் அறிவுக்குப் புறம்பாகப் பேசுபவர்களும் ஒரே தன்மை உடையவர்களோ?

`ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையின் பேதையார் இல்’ (834) எனத் திருவள்ளுவப் பெருந்தகை சுட்டும் பேதையரும், திருநாவுக்கரசர் பெருமான் சுட்டும் சழக்கரும் ஏறத்தாழ ஒத்த தன்மையரே ஆவர்.

`அறிவற்றவர்களே, குலத்தையும் கோத்திரத்தையும் கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்?’ என்பது பெருமானாரின் தெளிவான கேள்வி.

குலத்தையும் கோத்திரத்தையும் கொண்டு என்ன செய்யலாம்?

சமயத்தைக் கெடுக்கலாம்.

சமுதாயத்தைக் கெடுக்கலாம்.

தம்மையும் கெடுத்துக்கொள்ளலாம்.

குலத்தையும் கோத்திரத்தையும் கொண்டு வேறு என்னதான் செய்வது?

சைவ நன்மக்கள் கொள்ளவேண்டுவது அன்பு.

தள்ளவேண்டுவது சாதி.

கொள்ளவேண்டுவதைத் தள்ளி, தள்ளவேண்டுவதைக் கொள்ளுவது அறிவுடைமை ஆகுமோ?

`அன்பே சிவம்’ என்பார் திருமூலர்.

`பாத்திரம் சிவம்’ என்கிறார் தமிழரசர்.

இருவர் தமிழும் ஒன்றே.

அன்புதான் சிவம்; சிவம்தான் அன்பு.

இது சைவ வாய்பாடு.

`சாதி உணர்வை விட்டுவிடுங்கள்; நெஞ்சில் அன்பைக் கொள்ளுங்கள்; வணங்குங்கள்; இமைப்பொழுதுக்குள் இறைவர் அருள்புரிவார்’ எனத் தெளிவாகச் சொல்கிறார் சைவத் தலைவர்.

சாதி உணர்வால் ஏற்படும் கேட்டினையும் அன்பின் ஆற்றலையும் வலியுறுத்தும்பொருட்டே "மாத்திரைக்குள் அருளும் மாற்பேரரே" என அழுத்திச் சொல்கிறார் தமிழ்வேந்தர்.

சைவநெறி அன்புநெறி.

அன்புநெறி அப்பர் நெறி.

அப்பர் நெறி சைவர் நெறி.

நாம் சைவர்.

- அ. நம்பி

8 மறுமொழிகள் leave one →
  1. மார்ச் 20, 2010 6:42 பிற்பகல்

    மிக தெளிவான விளக்கம். தொடர்ந்து வரும்படி செய்துவிட்டீர்கள்.

    உங்கள் எழுத்து தொடர வாழ்த்துக்கள்

  2. மார்ச் 20, 2010 7:22 பிற்பகல்

    அன்பருக்கு,

    வாருங்கள் ஐயா.

    //மிக தெளிவான விளக்கம். தொடர்ந்து வரும்படி செய்துவிட்டீர்கள்.//

    கட்டுரையின் நீளம் கருதி மிகச் சுருக்கமாகவே விளக்கியுள்ளேன். தொடர்ந்து வருவீர்கள் என்பது மகிழ்ச்சி தருகிறது ஐயா.

    வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.

  3. பெ.கந்தசாமி, சிரம்பான், மலேசியா நிரந்தரத் தொடுப்பு
    மார்ச் 20, 2010 10:57 பிற்பகல்

    சைவத்தை முழுமையாக அறிந்துகொள்ளாதவர்கள் வேறு என்ன செய்வார்கள்? சாதிச் சாயம் பூசி சைவ சாதி என்ற ஒன்றை உருவாக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

  4. மார்ச் 21, 2010 9:20 மு.பகல்

    அன்பருக்கு,

    //சைவத்தை முழுமையாக அறிந்துகொள்ளாதவர்கள் வேறு என்ன செய்வார்கள்?//

    முழுமையாக அறிந்துகொள்ளாவிட்டாலும் ஓரளவேனும் அறிந்துகொள்ள முயல வேண்டாவா?

    //சாதிச் சாயம் பூசி சைவ சாதி என்ற ஒன்றை உருவாக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!//

    அப்படி ஏதும் நடந்துவிடாது என்று நம்புவோம் ஐயா.

  5. மே 15, 2010 8:42 பிற்பகல்

    MIHA ARUMAIYANA KARUTHU!!! THODARATTUM INTHA IRAI PANI!!

  6. மே 15, 2010 9:22 பிற்பகல்

    அன்பருக்கு,

    //MIHA ARUMAIYANA KARUTHU!!!//

    சைவப் பேரொளியாய்த் திகழும் திருநாவுக்கரசர் பெருமானார் அருளிச்செய்தது ஐயா.

    //THODARATTUM INTHA IRAI PANI!!//

    தொடர்ந்து எழுதத் திருவருள் துணைநிற்க வேண்டும்.

  7. ஆகஸ்ட் 22, 2010 9:41 மு.பகல்

    இந்து மதத்தை தவறான விதத்தில் இந்துக்கள் புரிந்து வைத்துள்ளனர்.
    எமக்கு இருக்கும் இந்த கொஞ்ச காலத்துக்குள் எம்மால் முடிந்தவரை
    மதத்தின் கரு தெரியாதவர்களுக்கு தெரியபடுத்துவோம்.

    எமது மதத்தை தூய வடிவில் மக்களை சென்றடைய ஏதாவது வழி செய்ய வேண்டும்.
    பதிவர்களின் தேடல்களின் மூலம் கிடைக்கும் தகவல்களை எமக்கு தெரிந்த சிலரிடமாவது கூறி இந்து மதத்தின் அடி தளத்தை நாம் இன்னும் உறுதி படுத்தலாம் .

  8. ஆகஸ்ட் 22, 2010 9:58 மு.பகல்

    அன்பருக்கு,

    உங்கள் எண்ணமும் நோக்கமும் பாராட்டுக்கு உரியன.

    இறைவர் திருவருள் துணைநிற்கட்டும்.

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 41 other followers