கொள்ளிவாய்ப் பேயுடன்… தன்னந்தனியாக! – மூன்று
யாரோ ஒருவர் விட்டுவிட்டு இருமியபடி எனக்குப் பின்னால் நின்றுகொண்டு இருந்தார்.
உற்றுப் பார்த்தேன்; தமிழரைப்போல் தெரிந்தது; வேட்டி; சற்றுப் பெரிய அளவிலான சட்டை; மெலிந்த உடல். எனக்கு ஓரளவு அச்சம் நீங்கியது.
`யார் இவர்? இந்த நேரத்தில் இங்கு என்ன செய்கிறார்?’ என்று கேட்க நினைத்தேன்.
ஏதும் கேட்பதற்குள் `சட்’டென்று என் பக்கத்தில் மணலில் உட்கார்ந்துகொண்டார் அவர்.
“நான் யார் என்று கேட்க நினைக்கிறீர்; சரிதானே?" என்று மெல்லச் சிரித்தபடி கேட்டார்.
“ஆமாம், நீங்கள் யார்?” என்று கேட்டேன்.
“நான் கொள்ளிவாய்ப் பேய்!” என்று அமைதியாகச் சொன்னார்; சொல்லிவிட்டு மீண்டும் சிரித்தார்.
`சரிதான்; இந்த நேரத்திலும் `தண்ணீர்’போல் இருக்கிறது; இவரிடம் எதற்குப் பேச்சு?’ என்று விடுதிக்குச் செல்ல எழுந்தேன்.
"என்ன எழுந்துவிட்டீர்? சிறிது நேரம் இரும்!” என்று என்னை உட்காரவைக்க என் கையைப் பற்ற முனைந்தார்.
மீண்டும் உட்கார்ந்தேன்.
“இதோ பாருங்கள்; விளையாட்டுப் பேச்சு வேண்டா! விளையாடுவதற்கு வேறு ஆளைப் பார்த்துக் கொள்ளுங்கள்!” என்று சற்று உரத்த குரலில் கூறினேன்.
“விளையாட்டுப் பேச்சா? ஓகோ, நான் கொள்ளிவாய்ப் பேய் என்று சொன்னதை நீர் நம்பவில்லை. அப்படித்தானே?” என்று கேட்டார்.
“ஆமாம்!”
“நான் பேய்தான்! ஏன் நம்ப மறுக்கிறீர்?”
“பார்ப்பதற்கு நீங்கள் பேய்போல இல்லை!”
“நீர் இதற்கு முன்னர்ப் பேயைப் பார்த்திருக்கிறீரா?”
“இல்லை.”
“பேயைப் பார்க்காமலேயே நான் பேயைப்போல் இல்லை என்று எப்படிச் சொல்கிறீர்?”
“கேள்விப்பட்டிருக்கிறேன்; கதைகளில் படித்திருக்கிறேன்; படங்களில் பார்த்திருக்கிறேன்.”
“பேய் இப்படித்தான் இருக்கும் என்று உமக்கு ஒரு கருத்து இருக்கிறது; நீர் நினைத்துக்கொண்டு இருப்பதுபோல் நான் இல்லை; அதனால் நம்ப மறுக்கிறீர்; சரிதானே?”
நான் பேசாமல் இருந்தேன்.
“நீர் நினைப்பதுபோல் இருந்தால் நான் பேய்; இல்லாவிட்டால் நான் பேய் அன்று; இப்படி நினைப்பது உமக்குச் சரியாகப் படுகிறதா? என்ன நியாயம் இது? உம்மைச் சொல்லி என்ன செய்ய? நீர் தமிழர்! இப்படித்தான் நினைப்பீர்! இதுதான் உம் வழக்கம்! சரி, போகட்டும், நான் பேய்தான்; சொல்வதை நம்பும்!” என்றார்; குரலில் சற்று ஏமாற்றம் தெரிந்தது.
“நீங்கள் சொல்வதை நான் எப்படி நம்புவது? ஆதாரம் வேண்டாவா?” என்று எரிச்சலுடன் கேட்டேன்.
“ஓகோ, ஆதாரம் இருந்தால்தான் நம்புவீர்; ஆதாரம் இல்லாவிட்டால் எதனையும் நம்பமாட்டீர்! அப்படித்தானே? சரி, என்ன ஆதாரம் வேண்டும்?”
“உங்களைக் கொள்ளிவாய்ப் பேய் என்று சொல்லிக் கொள்கிறீர்கள்; கொள்ளிவாய்ப் பேய் என்றால் என்ன?”
“கொள்ளிவாய்ப் பேயின் வாயில் இருந்து நெருப்பு வரும்! நீர் கதைகளில் படித்திருப்பீரே?”
“தெரியும்; படித்திருக்கிறேன். அதனால்தான் கேட்டேன். நீங்கள் கொள்ளிவாய்ப் பேய் என்றால் உங்கள் வாயிலிருந்து இப்போது நெருப்பு வரவேண்டும்! அதுதான் ஆதாரம்!”
“இவ்வளவுதானா? சரி, ஆனால் அதற்கு முன் ஒன்று சொல்கிறேன்; கேளும்! என்னை `நீங்கள்’ என்றும், `அவர்’, இவர்’ என்றும் நீர் சொல்லக்கூடாது; `நீ’ என்றும், `அது’, `இது’ என்றும்தான் சொல்லவேண்டும். பேய்கள் அஃறிணை; உயர்திணை அல்ல! நீர் இலக்கணம் படித்தது இல்லையா?”
எனக்கு உச்சந்தலை வரைக்கும் எரிச்சல்; எப்படியோ அடக்கிக்கொண்டேன்.
“இலக்கணத்தைப் பின்னர்ப் பார்த்துக்கொள்வோம்; முதலில் நீங்கள் ஆதாரம் காட்டுங்கள்!” என்றேன்.
“சரி, உமக்கு ஆதாரம்தானே வேண்டும்; இதோ பாரும்!” என்றபடி வாயை அகலத் திறந்தார் அவர்.
(வளரும்)
- அ. நம்பி
ஆ ஆ ஆ !!!!! இது மெத்த படித்த பேய் போல் அல்லவா இருக்கிறது, என்ன அய்யா, இது ஆயிரம் மெகா தொடர் போடலாம் போல் இருக்கிறது. கவனம், ராதிகா படித்தால் அப்படியே அல்வா போல் எடுத்து சென்று விடுவார். எது எப்படியோ, என் பொழுதை ஆர்வத்தோடு விடிய வைப்பதற்கு வாழ்த்துக்கள் அய்யா.
அன்பருக்கு,
//இது ஆயிரம் மெகா தொடர் போடலாம் போல் இருக்கிறது.//
`மெட்டி ஒலி’, `அரசி’, `கோலங்கள்’ முதலியவற்றால் உண்டான `அச்சம்’ இன்னும் தீரவில்லையா? அஞ்சாதீர்கள். தொடர்ந்து படியுங்கள்.
கண்டிப்பாக இது மனித பேயாகத்தான் இருக்கும். நெருப்பு என்னும் தீச்சட்டியை வார்த்தைகளாய் கொட்டும் மனிதர்கள், பேயை விட கொடியவர்கள். இருந்தாலும் பேயுடன் உறவாடும் நீங்கள் ரொம்ப ரொம்ப நல்…………
அன்பருக்கு,
//இருந்தாலும் பேயுடன் உறவாடும் நீங்கள் ரொம்ப ரொம்ப நல்…………//
அடடா, மிகுந்த நல்ல உள்ளம் உங்களுக்கு; பாராட்டுக்கு மகிழ்ச்சி ஐயா.
என்ன அய்யா இப்படி நடந்துவிட்டது, உங்கள் தொடரை படிப்பதற்காக இன்று விடுமுறை என்று பார்க்காமல் வேலைக்கு வந்து பார்த்தால்………….. நீங்கள் விடுமுறை எடுத்து விட்டீர்களே, சரி நாளை சந்திப்போம், வாழ்த்துக்கள் அய்யா.
அன்பருக்கு,
//என்ன அய்யா இப்படி நடந்துவிட்டது, உங்கள் தொடரை படிப்பதற்காக இன்று விடுமுறை என்று பார்க்காமல் வேலைக்கு வந்து பார்த்தால்………….. நீங்கள் விடுமுறை எடுத்து விட்டீர்களே,//
இன்று எழுதாமைக்கு வருந்துகிறேன்; அன்புகூர்ந்து பொறுத்துக்கொள்ளுங்கள் ஐயா.