கொள்ளிவாய்ப் பேயுடன்… தன்னந்தனியாக! – இரண்டு

2009 November 13
by அ.நம்பி

dbm01 

பேய்கள் நடமாட்டமா?

உசேன் சொன்னதைக் கேட்டதும் சிரிப்புத்தான் வந்தது; ஆனால் நான் சிரிக்கவில்லை.

`எனக்குத் தீங்கேதும் விளைந்துவிடக் கூடாது’ என்ற எண்ணம் கொண்ட அந்தப் பெரியவரின் உள்ளத்தைக் காயப்படுத்த நான் விரும்பவில்லை.

“உசேன், நீங்கள் சொல்வதை நான் மறுக்கவில்லை. அது உண்மையாகவே இருக்கட்டும்; ஆனால் கடற்கரையில் நீண்ட நேரம் இருக்கும் எண்ணம் எனக்கு இல்லை. விரைவாகத் திரும்பி விடுவேன்" என்றேன்.

நான் மாறுவதாக இல்லை என்பதை அவர் புரிந்துகொண்டார்.

“சரி தம்பி, ஓர் அரை மணி நேரத்தில் திரும்பி விடுங்கள்!” என்றார்.

“ஒரு மணி நேரமாவது ஆகும் என்று நினைக்கிறேன்; கவலைப்படாதீர்கள். வந்துவிடுவேன்!”

தயக்கத்தோடு ஒப்புக்கொண்டார் உசேன்; நீளமான ஒரு கைவிளக்கைக் கொடுத்தார்; வாங்கிக்கொண்டு புறப்பட்டேன்.

விடுதியைவிட்டு வெளியே வந்தேன்; சாலையில் சில அடி தொலைவு நடந்தேன்.

பின்னர் சாலையிலிருந்து பிரிந்து செல்லும் ஒரு கிளைப்பாதையில் நடக்கத் தொடங்கினேன்; சாலையின் இரு பக்கமும் புதர் மண்டிக் கிடந்தது.

பாம்புகள் இருக்கக்கூடும்; அதற்குத்தான் கைவிளக்கு.

சில மணித்துளிகளில் கடற்கரையை அடைந்தேன்.

வானம் தெளிவாக இருந்தது; வெண்மேகங்களுக்கிடையே தவழ்ந்த பிறைநிலவு ஓரளவு ஒளியைச் சிந்தியது; போதாததற்கு சிதறிக் கிடந்த விண்மீன்கள் வேறு; கடற்கரையில் அவ்வளவாக இருள் இல்லை. தெளிவாக இல்லை என்றாலும் ஓரளவு எல்லாவற்றையும் பார்க்க முடிந்தது.

கடற்கரை மணலில் அமர்ந்துகொண்டேன்.

பகலில் பார்க்கும் கடலும் கடற்கரையும் வேறு; இரவில் பார்க்கும் கடலும் கடற்கரையும் வேறு; இருவேறு உலகங்கள் என்றுதான் சொல்லவேண்டும். அவ்வளவு வேறுபாடுகள்.

பகலில் தெளிவாகத் தெரியும் தொடுவானம் எங்கோ வெகு தொலைவில் இருப்பதுபோல் இருண்டு கிடந்தது. தொடுவானத்தைத் தொட்டுக்கொண்டு இரண்டு கப்பல்கள் சென்றன. தொலைவில் தெரிந்த மங்கிய ஒளியைக்கொண்டு அவை கப்பல்கள் என்று ஊகித்தேன்.

இரும்பைக் காய்ச்சி ஊற்றியதுபோல் கடல்நீர் கண்ணுக்கு எட்டும் தொலைவுவரை பரந்து கிடந்தது; அவ்வளவாக அசைவு இல்லை. அலைகள் மெதுவாக வந்து கரையைத் தொட்டுத் திரும்பிக்கொண்டு இருந்தன.

இயற்கையின் உண்மையான அழகைப் பார்ப்பதற்கு இரவுதான் சரியான நேரம் என்று எண்ணிக்கொண்டேன்; மகிழ்ச்சியில் உள்ளம் பறக்கத் தொடங்கியது.

ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை.

எனக்கு வலப்பக்கமும் இடப்பக்கமும் தென்னைமரங்கள் தலைவிரித்துக்கொண்டு நின்றன. காற்றில் ஓலைகளின் இலேசான அசைவு என்னவோபோல் இருந்தது.

பேய்கள் உண்டு என்று ஒருநாளும் நான் நம்பியது இல்லை. நம்பிக்கை இல்லாததால் பேய்களை நினைத்து அஞ்சியதும் இல்லை.

ஆனால் மெல்ல மெல்ல நிலைமை மாறத் தொடங்கியது.

சிறு பையனாக இருந்தபோது கேள்விப்பட்ட பேய்க்கதைகள் எல்லாம் நினைவுக்கு வரத் தொடங்கின; பார்த்த பேய்ப்படங்கள் எல்லாம் ஒரே நேரத்தில் மீண்டும் `திரை’க்கு வந்தன.

வெண்புகைக்கு நடுவே வெள்ளை ஆடைகளில் பெண்கள் மிதந்து வந்தார்கள்.

வெள்ளைப் புடைவை அணிந்துகொண்டு `நானே வருவேன் இங்கும் அங்கும், யாரென்று யாரறிவார்’ என்று பெண்ணுருவம் ஒன்று கையை நீட்டி நீட்டி இழுத்து இழுத்துப் பாடியது.

எல்லாம் நினைவுகள்தாம்; ஆனால் நெஞ்சுக்குள் பனிக்கட்டிகள் உருவாகத் தொடங்கின.

உசேன் சொன்னது நினைவுக்கு வந்தது.

அதற்கு மேலும் அங்கு உட்கார்ந்திருக்கத் துணிவில்லை.

`போதும்; விடுதிக்குப் போய்விடலாம்’ என்று முடிவுசெய்தேன்.

எழுவதற்குள் என் முதுகுக்குப் பின்னால் யாரோ மெல்ல இருமும் ஓசை கேட்டது.

திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன்.

(வளரும்)

- அ. நம்பி

6 Responses leave one →
  1. 2009 November 13
    Jawahar permalink

    படு சுவாரஸ்யம்…

    http://kgjawarlal.wordpress.com

  2. 2009 November 13

    அன்பருக்கு,

    வாருங்கள் ஐயா.

    //படு சுவாரஸ்யம்… //

    மகிழ்ச்சி; தொடர்ந்து படிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

  3. 2009 November 13

    உங்கள் கதை எல்லாம் மாறுபட்ட கோணத்தில் இருக்கிறது. கொள்ளிவாய்ப் பேய் கதையும் நன்றாக செல்கிறது. அந்த காலத்தில் என் தாய் சொல்லக் கேட்டு இருக்கின்றேன் கொள்ளிக்கட்டை பேய் என்று,

  4. 2009 November 13

    அன்பருக்கு,

    வாருங்கள் ஐயா.

    //உங்கள் கதை எல்லாம் மாறுபட்ட கோணத்தில் இருக்கிறது. கொள்ளிவாய்ப் பேய் கதையும் நன்றாக செல்கிறது. அந்த காலத்தில் என் தாய் சொல்லக் கேட்டு இருக்கின்றேன் கொள்ளிக்கட்டை பேய் என்று,//

    வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.

  5. 2009 November 13

    ஆ ஆ ஆ அய்யா மெகா தொடரை கொன்னுபுட்டிங்க போங்க !!!!இடை இடையே
    அந்த சூழ்நிலை ,பழைய பேய் கதை அதுதான் மசளைதூள் விளம்பரமோ ,நகைசுவைக்காகதன் சொன்னேன் அய்யா ,கதை மிகவும் ஆர்வத்தை
    ஏற்படுத்துகிறது ,காலையில் இருந்து உங்கள் தொடரை படிக்க எந்தனையோ தடவை
    உள்ளே வந்து போனேன் அய்யா,உங்கள் கதையின் நடை அற்புதம் ,வாழ்த்துக்கள் அய்யா,சிறு இடைவேளைக்குப்பின் உங்களை சந்திக்கிறேன் ……………….

  6. 2009 November 13

    அன்பருக்கு,

    வாருங்கள்; மகிழ்ச்சி; நாளை தொடரும். தவறாமல் படியுங்கள்.

Leave a Reply

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS