கொள்ளிவாய்ப் பேயுடன்… தன்னந்தனியாக!

2009 November 12
by அ.நம்பி

dbm

(இது கதை அன்று; கட்டுரை அன்று; கற்பனையும் அன்று. ஒரு நிகழ்ச்சி; அவ்வளவுதான். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர்…)

நகரத்திலிருந்து ஏறத்தாழ ஆறு கல் தொலைவில் அமைந்திருக்கிறது அந்தத் தங்கும் விடுதி.

நீண்ட கடற்கரையை ஒட்டி அமைந்திருப்பது அந்த விடுதியின் சிறப்பு.

பணியை முன்னிட்டு அந்த நகரத்திற்குச் செல்லும்போது  அந்த விடுதியில் சிலமுறை தங்கி இருக்கிறேன். அரசு பணி; அரசு ஏற்பாடு செய்யும் விடுதியில்தான் தங்கவேண்டும்; உயர்தரமான விடுதி அது.

ஒவ்வொரு முறை தங்கும்போதும் ஓய்வுநேரத்தில் கடற்கரைக்குச் சென்று வருவதைப் பழக்கமாக்கிக் கொண்டேன். உள்ளம் புத்துணர்ச்சி பெற அது நல்ல வழி.

ஆனால் இரவு நேரத்தில் அங்குச் சென்றதே இல்லை. கடலின் அழகையும் கடற்கரையின் அழகையும் இரவு நேரத்தில் பார்த்தே ஆகவேண்டும் என்று முடிவெடுத்தேன்.

உசேனை அழைத்தேன்; விடுதியின் பணியாள் அவர்; மலாய் இனத்தவர்.

“உசேன், எனக்கு ஒரு கைவிளக்கு வேண்டும்; கிடைக்குமா?” என்றேன்.

“கைவிளக்கா? எதற்குத் தம்பி கைவிளக்கு?” என்று கேட்டார். என்னைவிட ஏறத்தாழ முப்பது ஆண்டு மூத்தவர்; மிகவும் நெருங்கிப் பழகுபவர்.

“கடற்கரைக்குச் செல்லவேண்டும்!" என்றேன்.

அவர் முகம் `சட்’டென மாறியது; இருண்டது.

“இந்த நேரத்திலா? மணி பதினொன்று ஆகிறது; நாளைக்குக் காலையில் போகலாமே!” என்றார் உசேன்.

“இல்லை உசேன், இப்போதே போகவேண்டும்; இந்தக் கடற்கரையை இரவு நேரத்தில் நான் பார்த்ததே இல்லை. கைவிளக்குக் கொடுங்கள்!” என்று அழுத்தமாகக் கேட்டேன்.

உசேன் ஏதோ சொல்லத் தயங்குவதுபோல் தோன்றியது.

“சொல்லுங்கள். என்ன அது?” என்றேன்.

“இல்லை தம்பி, இந்தக் கடற்கரைக்கு இரவு நேரத்தில் யாரும் போகமாட்டார்கள்!”

“ஏன்?”

“போகமாட்டார்கள் என்றால்…, போகக்கூடாது என்று எடுத்துக்கொள்ளுங்கள்!”

“அதுதான் ஏன் என்று கேட்கிறேன்!”

“தம்பி, நீங்கள் இந்தக் காலத்துப் பிள்ளை; சொன்னால் கேட்கமாட்டீர்கள்; என்ன சொன்னாலும் நம்பவும் மாட்டீர்கள். விட்டுவிடுங்கள். நாளைக்குப் போகலாம்!” என்று உசேன் உறுதியாகச் சொன்னார்.

“சொல்ல நினைப்பதைச் சொல்லிவிடுங்கள்; நம்புவதா இல்லையா என்று பிறகு பார்க்கலாம்!”

“தம்பி, இந்த விடுதிக்கு அருகில் உள்ள சிற்றூரைப் பார்த்திருப்பீர்கள். அங்குப் பிறந்து வளர்ந்தவன் நான்; இந்தப் பகுதி முழுவதும் எனக்கு நன்கு தெரியும். எனக்குத் தெரிந்து இரவு நேரத்தில் அந்தக் கடற்கரைக்கு யாரும் சென்றதே இல்லை. ஆனால் அங்குச் சென்ற சிலரின் கதை வேறு மாதிரி முடிந்ததாக என் தந்தை சொல்லி இருக்கிறார்!”

“வேறு மாதிரி என்றால்…?”

“வேறு மாதிரி என்றால்…, நல்ல முடிவு இல்லை என்று வைத்துக்கொள்ளுங்கள்!”

“அப்படியா? சரி, சொல்லுங்கள்; ஏன் அங்குப் போகக்கூடாது?”

“வேண்டாத பிடிவாதம் பிடிக்கிறீர்கள் தம்பி. சரி, சொல்கிறேன்!”

“சொல்லுங்கள்!”

நீண்ட பெருமூச்சு விட்டார் உசேன்.

“சொல்கிறேன்; நம்புவதும் நம்பாததும் உங்களைப் பொறுத்தது. இந்தக் கடற்கரையில் இரவு நேரத்தில் பேய்கள் நடமாட்டம் இருக்கிறது தம்பி!”

(வளரும்)

- அ. நம்பி

14 Responses leave one →
  1. 2009 November 12

    ஆரம்பிக்கவே இல்லை.. அதற்குள் தொடரும் போட்டு விட்டீர்களே..?:(

  2. 2009 November 12

    அன்பருக்கு,

    வாருங்கள் ஐயா.

    //ஆரம்பிக்கவே இல்லை.. அதற்குள் தொடரும் போட்டு விட்டீர்களே..?:(//

    நீளமாக எழுதுவதனைத் தவிர்ப்பதற்காகத்தான் இப்படி; `ஒரு முன்னுரைபோல’ என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாமே!

    அடுத்த பகுதியில் திண்ணமாக `அது’ வரும் ஐயா.

    வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.

  3. 2009 November 12
    bicky permalink

    நம்பி அவர்களே இதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்

    முழுமையாக வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்……..

    காத்திருக்க முடியவில்லை ஐயா… மன்னியுங்கள்

  4. 2009 November 12
    சி .நா.மணியன் permalink

    என்ன அய்யா நீங்களும் மெகா தொடர் ஆரம்பிக்க உள்ளீர்களா அய்யா, வாழ்த்துக்கள் அய்யா .

  5. 2009 November 12

    அன்பருக்கு,

    //நம்பி அவர்களே இதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்

    முழுமையாக வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்……..

    காத்திருக்க முடியவில்லை ஐயா… மன்னியுங்கள்//

    அன்று இரவு நடந்த நிகழ்ச்சியை விவரமாக எழுதவேண்டும்; எழுதினால் நீண்டுவிடும். அதனால்தான் இந்த `வளரும்’ முறை. பொறுத்துக்கொள்ளுங்கள் ஐயா. நாளை தொடருவேன்.

  6. 2009 November 12

    அன்பருக்கு,

    //என்ன அய்யா நீங்களும் மெகா தொடர் ஆரம்பிக்க உள்ளீர்களா அய்யா,//

    `நனவுகள்’ வரலாஆஆற்ற்ற்றில் முதன்ன்ன் முறையாஆஆக…’ என்று வைத்துக்கொள்ளுங்களேன்!

  7. 2009 November 12
    bicky permalink

    அது சரி, நடு நடுவே ஊதுபத்தி .. ஊறுகாய் விளம்பரம் போடாமல் இருந்தால் சரி

  8. 2009 November 12

    அன்பருக்கு,

    மசாலைத்தூளை விட்டுவிட்டீர்களே!

  9. 2009 November 13
    riyazkhan permalink

    ayyo thihil arambamo

  10. 2009 November 13

    அன்பருக்கு,

    வாருங்கள் ஐயா.

    //ayyo thihil arambamo//

    வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.

  11. 2009 November 13
    trpattabiraman permalink

    கந்த சஷ்டி கவசத்தில் வரும் கொள்ளிவாய் பேய்களோடு குறளை பேய்களையும் கண்டீரா என்பதையும் தெரிவிக்கவும்

  12. 2009 November 13

    அன்பருக்கு,

    //கந்த சஷ்டி கவசத்தில் வரும் கொள்ளிவாய் பேய்களோடு குறளை பேய்களையும் கண்டீரா என்பதையும் தெரிவிக்கவும்//

    சொல்வேன்; அன்புகூர்ந்து பொறுத்துக்கொள்ளுங்கள் ஐயா.

  13. 2009 November 13
    bicky permalink

    இன்னும் ஏன் தாமதம் பொங்கி எழுந்திடு மனோகரா…. மீதியை எழுதிடு

  14. 2009 November 13

    அன்பருக்கு,

    //இன்னும் ஏன் தாமதம் பொங்கி எழுந்திடு மனோகரா…. மீதியை எழுதிடு//

    இந்த மறுமொழி அங்கு (கொள்ளிவாய்ப் பேயுடன்… தன்னந்தனியாக! – இரண்டு) இருக்கவேண்டும் ஐயா; சற்றுக் குழம்பிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

Leave a Reply

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS