கடற்கரையில் ஒரு தேவதை…!
காலை நேரம்; கடற்கரை; பெரியவர் ஒருவர் ஏதோ சிந்தித்தபடி அமர்ந்திருந்தார்.
மின்னல்போல் ஓர் ஒளி தோன்றியது; ஒளியில் பெண்ணுருவம் ஒன்று தோன்றியது.
“யார் நீ?” என்று கேட்டார் பெரியவர்.
“நான் தேவதை!” என்று இனிய குரலில் மறுமொழி வந்தது.
“தேவதையா? எங்கு வந்தாய்?”
“உங்களுக்கு வரம் கொடுக்கவந்தேன்!”
“வரமா? நான் கேட்கவில்லையே?”
“தேவதை என்றால் வரம் கொடுத்துத்தானே ஆகவேண்டும்; கேளுங்கள்!”
“எத்தனை வரங்கள் தருவாய்?”
“நீங்கள் கதைகளே படித்ததில்லையா? மூன்று வரங்கள் கேட்கலாம்!”
“என்ன கேட்டாலும் தருவாயா?”
“தருவேன்; ஆனால் ஒரு நிபந்தனை; என்னால் அறவே முடியாதனவற்றைக் கேட்டால் மறைந்துவிடுவேன்!”
பெரியவருக்கு நம்பிக்கை இல்லை. `யாரோ பெண்ணொருத்தி விளையாட்டாக ஏதோ சொல்கிறாள்’ என்று நினைத்தார்.
“இந்த மணலைக் கயிறாகத் திரிக்கவேண்டும்” என்றார்.
“அப்படியே ஆகட்டும்” என்றது தேவதை.
மறுகணம் கயிறாகிவிட்டது கடற்கரை மணல்.
பெரியவருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை.
`ஏதோ கண்கட்டு வித்தை செய்கிறாள்; நாமும் சீண்டிப் பார்ப்போமே’ என்று நினைத்தார்.
“கிழக்கே எழும் ஞாயிறு மேற்கே எழவேண்டும்” என்று சொல்லிச் சிரித்தார்.
“அப்படியே ஆகட்டும்” என்றது தேவதை.
கிழக்கில் இருந்த ஞாயிறு உடனே இடம்மாறி மேற்கில் நின்றுகொண்டது.
பெரியவர் திகைத்துப்போனார்.
முன்னால் நிற்பது உண்மையில் தேவதைதான் என்று உணர்ந்துகொண்டார்.
தேவதையின் ஆற்றலைப் புரிந்துகொண்டார்.
இரண்டு வரங்களை வீணாக்கியமைக்கு வருந்தினார்.
`இன்னும் ஒரே ஒரு வரம்! என்ன கேட்பது?’
சிந்தித்தார்.
`தன்னல விழைவு நன்றன்று; பொதுநல விழைவே நன்று’ என முடிவெடுத்தார்.
“இந்த நாட்டில் என் சமுதாயம் என்றும் ஒற்றுமையாக வாழவேண்டும்” என்றார்.
தேவதை மறைந்துவிட்டது.
- அ. நம்பி
(நனவுகள் – 29.09.2008)
நமக்கு நாமே நம் சமுதாயம் ஒற்றுமையின்றி உள்ளது என்று கூறிக்கொண்டால் எதாவது பயன் உண்டா? எந்த சமுதாயம் தான் எல்லா நேரத்திலும் எல்லா சூழ்நிலையிலும் ஒற்றுமையுடன் இருந்துள்ளன? பல நேரங்களில் நாமும் பல விசயங்களில் ஒற்றுமையுடன் இருந்திருகிறோம்.
வாய்விட்டு சிரித்தேன் அய்யா. வாழ்த்துக்கள்.
அன்பருக்கு,
கடந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்பட்ட கதை இது; அதற்கு அன்பர் ஒருவர் எழுதிய மறுமொழியும் என் விளக்கமும் கீழே:
உங்கள் கருத்து:
//நமக்கு நாமே நம் சமுதாயம் ஒற்றுமையின்றி உள்ளது என்று கூறிக்கொண்டால் எதாவது பயன் உண்டா?//
இக்கேள்விக்கு விடை மேலே உள்ளது.
//எந்த சமுதாயம் தான் எல்லா நேரத்திலும் எல்லா சூழ்நிலையிலும் ஒற்றுமையுடன் இருந்துள்ளன?//
அதனால் நாம் பிளவுபட்டு நிற்பது சரி என்கிறீர்களா?
//பல நேரங்களில் நாமும் பல விசயங்களில் ஒற்றுமையுடன் இருந்திருகிறோம்.//
`ஒற்றுமையாக இருக்கக்கூடாது’ என்பதில்தான் நாம் ஒற்றுமையாக இருக்கிறோம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
இந்நாட்டில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக நம் இனத்தில் விளைந்த ஒற்றுமை இன்மையையும் அதனால் உருவான கேடுகளையும் பிறர் கைகொட்டி எள்ளி நகையாடியதையும் படித்தும் கேட்டும் நேரில் பார்த்தும் நொறுங்கிப்போன நெஞ்சம் சொல்லும் கதை இது. அழத் தெம்பில்லை; சிரிக்க மட்டுமே முடிகிறது; என்ன செய்வது?
அன்பருக்கு,
//வாய்விட்டு சிரித்தேன் அய்யா. வாழ்த்துக்கள்.//
நன்றாகச் சிரியுங்கள்; சிரித்து முடித்ததும் சிந்தனை தோன்றும்.
தேவர் அனையர் கயவர்’
அய்யா, இதற்கு விளக்கம் சொல்லுங்கள், எனக்கு சரியாக புரியவில்லை.
அன்பருக்கு,
//தேவர் அனையர் கயவர்’
அய்யா, இதற்கு விளக்கம் சொல்லுங்கள், எனக்கு சரியாக புரியவில்லை.//
`தேவர் அனையர் கயவர் அவரும்தாம்
மேவன செய்தொழுக லான்.’
இது திருக்குறள் பாட்டு; அதிகாரம் 108 – கயமை; பாட்டு எண் – 3 (1073)
தேவர்கள் தாம் விரும்புவனவற்றை எல்லாம் செய்வார்கள். கயவர்களும் தாம் விரும்புவனவற்றை எல்லாம் செய்வார்கள். எனவே கயவர்கள் தேவரை ஒத்தவர்கள்.
கயவர்களைத் தேவரோடு திருவள்ளுவர் ஒப்பிடுவது அவர்களைப் புகழ்வதற்காக அன்று.
புகழ்வதுபோல் இகழ்வது இது; இலக்கணத்தில் இதனை வஞ்சப் புகழ்ச்சியணி என்பர் ஆன்றோர்.
விளக்கத்திற்கு மிகவும் நன்றி அய்யா.
அன்பருக்கு,
//விளக்கத்திற்கு மிகவும் நன்றி அய்யா.//
வளர்க; வாழ்க.
நிறைவே காணும் மனம் வேண்டும்,இறைவா நீ அதை தர வேண்டும் என்றார் அகத்திய பெருமான்- யாராவது கேட்கிறீர்களா?-அனைவரின் மீதும் குறை கண்டு தன குறைகளை மறைத்து அல்லவா உலகில் வெறுப்பும் வேதனையையும் விதைத்து கொண்டு இருக்கிறார்கள்.
பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே -அப்பகைவர் உள்ளத்திலும் நம் அன்புருவான பரமன் வாழ்கின்றான்- என்றான் பாரதி யாராவது காது கொடுத்து கேட்கிறீர்களா?-கூலி படை வைத்து அல்லவா ஆட்களை கொல்லுகிறீர்கள்.
என்று சொல்லிக்கொண்டே போகலாம். முடிவில்லை
உலகத்தை திருத்த முடியாது
நாம்தான் திருந்த வேண்டும்
மற்றவர்களும் நல்வழி நடக்க நாம் பிரார்த்தனை செய்வோம்.