கோபாலபுரத்துக் கேழ்வரகு…!

2009 November 2

etm3

இந்த நிலையில், இங்கே அகதிகளாக உள்ள இலங்கை தமிழர்களை இந்த மண்ணின் நிரந்தர குடிமக்களாக ஆக்கவேண்டுமென்ற எனது வேண்டுகோளை பரிசீலிப்பதாக மத்திய அரசு வாக்களித்துள்ளது.

இது மட்டும் போதுமா? இலங்கையில் எஞ்சியுள்ள ஈழத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் என எல்லாத் தமிழர்களையும் ஒட்டுமொத்தமாகத் தமிழகத்திற்கு வரச்செய்து அவர்கள் அனைவருக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கலாம்; உங்கள் ஆருயிர் நண்பர் மகிந்தா ராஜபக்சேவுக்குத் `தொல்லை’ விட்டுப்போகும். இலங்கைத்தீவு முழுவதும் சிங்களவர்களுக்கே உரிமையாகிவிடும். இப்படி ஒரு வேண்டுகோளை மைய அரசுக்கு விடுக்கலாமே!

etm6

இந்தியாவில் நான்கு இலட்சத்துக்கும் மிகுதியான ஏதிலிகள் இருக்கிறார்கள். தமிழ் ஏதிலிகளுக்கு மட்டும் குடியுரிமை வழங்க முடியுமா? இவ்வாறு வழங்கினால் ஏதிலிகள் அனைவருக்கும் குடியுரிமை வழங்கவேண்டும் என்னும் சூழ்நிலை உருவாகாதா? அனைவருக்கும் வழங்க மைய அரசு ஒப்புக்கொள்ளுமா?

நீங்கள் என்ன சொன்னாலும் மக்கள் நம்புவார்கள் என்று இன்னமுமா உங்களுக்கு எண்ணம் இருக்கிறது?

`கேழ்வரகில் நெய் வடிகிறது’ என்கிறீர்கள்; இவ்வாறு சொல்வது உங்கள் பழக்கம். ஆனால் `கேட்பவர்களுக்கு அறிவே இருக்காது’ என்று உண்மையிலேயே நம்புகிறீர்களா?

தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகள் நிலை பற்றி வெளிவந்துள்ள நீண்ட கட்டுரை ஒன்றை நான் படிக்க நேர்ந்தது. இங்கே அகதிகளாக உள்ள பல்லாயிரக்கணக்கான இலங்கை தமிழ் மக்கள் தாங்கள் வாழ்வதற்குரிய அடிப்படை ஆதாரங்கள், வசதிகள் எதுவுமின்றி எத்துணை துன்பங்களுக்கு உள்ளாகியிருக்கின்றார்கள் என்பதை காட்டும் புகைப்படங்களை கண்டு கண்ணீர் விட்டேன்.

நீங்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சர். முதலமைச்சர் என்றால் ஆள், அம்பு, சேனை, பானை, `ரத கஜ துரக பதாதிகள்’ என்று என்னென்னவோ இருக்கும் என்று எல்லாருக்கும் தெரியும். ஒரு கட்டுரையைப் படித்துத்தானா ஏதிலிகளின் நிலையை நீங்கள் கண்டுகொண்டீர்கள்? உலகத்துக்கே தெரிந்த உண்மையை இப்போதுதானா நீங்கள் தெரிந்துகொண்டீர்கள்?

கண்ணீர் விட்டீர்களா? ஆடுகள் நனைந்தால் நனையட்டுமே! அழவும் தெம்பற்ற ஆடுகள் அவை; அவற்றுக்காக நீங்கள் ஏன் கண்ணீர் விடுகிறீர்கள்?

அவர்கள் கவலைகளை உடனடியாக தீர்ப்பதற்கு அவசர நடவடிக்கை மேற்கொள்வதுதான் நமது கடமையாகுமென கருதி, இலங்கை தமிழ் அகதிகளை பாதுகாத்திடவும், அவர்தம் பட்டினி போக்கிடவும், படிப்பு வாய்ப்பு வழங்கிடவும், தமிழக அரசின் எல்லா துறையினருக்கும் பொறுப்புண்டு. எனவே, இலங்கை அகதிளுக்கு வாழ்வளிக்க, தொடர்புடைய துறையினர் அனைவருக்கும் ஆலோசனை வழங்கவும், ஆய்வுகள் மேற்கொண்டு ஆவணம் செய்யவும், இலங்கை தமிழர்கள் அல்லல் போக்கிட உடனே அரும்பணிகள் தொடரப்பட வேண்டுமென்று ஆணையிடுவதற்கு வாய்ப்பாக நாளை காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் அதிகாரிகளை அழைத்து விவாதிக்க இருக்கிறேன்.

உடனடியாக…, அவசர நடவடிக்கை… அடடா, உங்கள் விரைவை நினத்தால் உடம்பு புல்லரிக்கிறது. `இத்தனை ஆண்டுகள் ஏன் இவற்றைச் செய்யவில்லை’ என்று யாரும் கேட்கமாட்டார்கள் என்று நினைத்துச் செயல்படும் உங்கள்  அரசியல் பாராட்டுதற்கு உரியது.

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இன்னல் இம்மியளவும் இல்லாத வகையில் இன்புற்று வாழ்ந்திட நாளைய கூட்டத்தின் வாயிலாக தேவையான நிதி ஒதுக்கி அவர்தம் தேவைகள் நிறைவு செய்யப்பட வழிவகுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்கள் `உலகக் கலைப்படைப்பாளி” என்று தெரியும். ஆனால் உங்கள் நாடகங்களில்  இப்போது நகைச்சுவையே மிகுந்து நிற்கிறது. எனவே `கலைஞர் கருணாநிதி’ என்பதைப் பார்க்கிலும் `நகைச்சுவைக் கலைஞர் கருணாநிதி’ என்பதுதான் நன்கு பொருந்துகிறது. இதுதான் காலத்தை வென்று நிலைத்து நிற்கும் என்றும் தோன்றுகிறது.

- அ. நம்பி

4 Responses leave one →
  1. 2009 November 2

    ஓட்டுக்காக எடுக்கப்படும் சில ஆலோசனைகளையும் இப்படி விமர்சித்தால் அப்புறம் எப்படி கம்பெனி நடத்தறது…

    அவ்வ்வ்வ்…………

  2. 2009 November 2

    அன்பருக்கு,

    //ஓட்டுக்காக எடுக்கப்படும் சில ஆலோசனைகளையும் இப்படி விமர்சித்தால் அப்புறம் எப்படி கம்பெனி நடத்தறது…//

    இவர் `கம்பெனி’ நடத்த உள்ளூர்ப் பிரச்சினைகள் போதுமே, ஈழத் தமிழர்களை விட்டுவிட்டால் என்ன ஐயா?

  3. 2009 November 2

    மீன் பிடிக்க போகிற தமிழ்நாட்டு மீனவர்களை அவன் பயம் இல்லாமல் சுட்டு தள்ளுகிறான். அதை கேட்க வக்கு இல்ல, வந்துட்டாரு இவங்களுக்கு குடிஉரிமை கொடுக்க நமது நகைச்சுவை சக்கரவர்த்தி, அண்ட புளுகன் கருணா. வாழ்த்துக்கள் அய்யா.

  4. 2009 November 2

    அன்பருக்கு,

    //…நகைச்சுவை சக்கரவர்த்தி, அண்ட புளுகன்…//

    சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க ஈழத் தமிழர்களை வைத்து இன்னும் பல நகைச்சுவை நாடகங்கள் அரங்கேறும்; பொறுத்திருந்து பாருங்கள்.

Leave a Reply

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS