ஊரை ஏமாற்றி உலையில் போடும் சோதிடர்கள்…!

2009 October 30

nss01

சோதிடர்களின் ஏமாற்று வேலைகளுக்கு ஓர் எல்லை இல்லாமல் போய்விட்டது.

அவர்களின் பொய்யும் புரட்டும் பித்தலாட்டமும் திருகுதாளமும் பெருகிக்கொண்டே இருக்கின்றன.

அவர்களை நம்பி அடியோடு கெட்டுச் சீரழிபவர்களின் எண்ணிக்கை வளர்ந்துகொண்டு இருக்கிறது.

`எவர் எக்கேடு கெட்டாலும் கெடட்டும்; எங்களுக்கு என்ன? எங்களுக்குப் பணம் வந்தால் போதும்’ என்னும் சிந்தனையோடு திட்டமிட்டுச் சமுதாயத்தைக் கெடுக்கிறார்கள்.

இன்றைய நாளிதழ் ஒன்றில் வெளிவந்த சோதிடப் பகுதியில் ஒரு வினா:

ast01

பிள்ளைகளின் படிப்பைக் குறித்துக் கவலையுறும் பெற்றோர்கள் அதுபற்றிப் பேசவேண்டுமானால் அவர்கள் பயிலும் பள்ளிக்குச் செல்லவேண்டும். ஆசிரியர்களிடம் கலந்துரையாடவேண்டும்; தேவையெனில் மருத்துவர்களை நாடவேண்டும்.

ஆனால் இந்தத் தந்தையோ சோதிடரிடம் கேட்கிறார்.

`அவனது போக்கில் எப்போது மாற்றம் ஏற்படும்’ என்னும் கேள்விக்குக் கல்வியாளர்களோ மருத்துவர்களோ விடையிறுக்கக்கூடும்.

`10–ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் அவன் தேர்ச்சி பெறுவானா’ என்பது அடுத்த கேள்வி; இக்கேள்விக்கு யாராலும் விடை சொல்ல முடியுமா?

`பரிகாரம் ஏதும் செய்யவேண்டுமா’ என்பது இன்னொரு கேள்வி.

கண்டிப்பாகப் `பரிகாரம்’ செய்யவேண்டும்; `என்ன செய்யவேண்டும்’ என்று சொல்லத் தகுதி உடையவர்கள் கல்வியாளர்களும் மருத்துவர்களுமே ஆவர்.

எல்லாக் கேள்விகளுக்கும் சோதிடப் புரட்டர் விடை சொல்கிறார்:

ast06

`இந்தப் பிள்ளையின் படிப்புப் பிரச்சினைக்குக் கோள்களே காரணம்; கோள்கள் இடம் மாறும்போது பிரச்சினை தானே நீங்கிவிடும்’ என்கிறார் சோதிடர்.

என்ன மேற்படிப்புப் படிக்கவேண்டும் என்றும் சொல்கிறார்; இதனைச் சொல்வதற்கு இவருக்கு என்ன தகுதி இருக்கிறது?

`உங்கள் மகனின் வருங்காலம் குறித்துப் பெரிதாகக் கவலைப்பட ஏதுமில்லை’ என்றால் என்ன பொருள்? `என்னை நம்புங்கள்; அவன் படிப்புக் குறித்து ஏதும் சிந்திக்கத் தேவையில்லை; அவன் கெட்டுக் குட்டிச்சுவர் ஆகட்டும்’ என்றுதானே பொருளாகிறது?

பெண்மணி ஒருவர் கேட்கிறார்:

ast04

மருத்துவரைக் காணவேண்டும்; அவரைக் கேட்கவேண்டும்; ஆனால் சோதிடரைக் கேட்கிறார்.

சோதிடர் சொல்கிறார்:

ast05

`அடுத்த ஆண்டு மேத் திங்களுக்குப் பிறகு தீரும்’ என்றால் என்ன பொருள்?

`கோள்களின் இருப்பால் நோய் வந்துள்ளது; அடுத்த ஆண்டு மேத் திங்களுக்குப் பிறகு கோள்களின் நிலை மாறும்; நோய் தீரும்; அப்போதுதான் மருத்துவம் செய்துகொள்ள வேண்டும்’ என்றுதானே சொல்கிறார்?

`இன்னும் ஏழு திங்கள் நோயில் துன்புற்றுத்தான் ஆகவேண்டும்; மருத்துவம் செய்துகொண்டாலும் நோய் தீராது’ என்று பொய் சொல்லி ஏமாற்றலாமா?

மண்காட்டிப் பொன்காட்டி மாய இருள்காட்டிச்
செங்காட்டில் ஆடுகின்ற தேசிகனைப் போற்றாமல்
கண்காட்டும் வேசியர்தம் கண்வலையில் சிக்கிமிக
அங்காடி நாய்போல் அலைந்தனையே நெஞ்சமே.

இது பட்டினத்தார் பாடல்.

கண்காட்டும் வேசியருக்கும் சோதிடர்களுக்கும் என்ன வேறுபாடு?

இந்தச் சோதிட வேசியரின் ஏமாற்று வலையில் சிக்கினால் அங்காடி நாய்போல் அலைய நேரிடுவது திண்ணம்; தவிர்க்க இயலாது.

சிக்கிக்கொள்ளாது இருப்பதே அறிவுடைமைக்குச் சான்றாகும்.

- அ. நம்பி

10 Responses leave one →
  1. 2009 October 30

    கொதித்துப்போய் விட்டீர்களே அய்யா. இந்த கொடுமை இல்லாத பத்திரிகைகள், தொல்லைகாட்சி நிகழ்ச்சிகளே கிடையாது. இருந்தாலும் அடிமேல் அடி கொடுத்துக்கொண்டுதான் இருக்க வேண்டும். நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கேட்ட மனிதரை நினைந்து விட்டால்… வாழ்த்துக்கள் அய்யா.

  2. 2009 October 30

    அன்பருக்கு,

    //இருந்தாலும் அடிமேல் அடி கொடுத்துக்கொண்டுதான் இருக்க வேண்டும். //

    நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் திருத்தம் ஏற்படும் என்று நம்பிச் செய்தால் ஏமாற்றம்தான் விளையும். திருத்தம் ஏற்பட இன்னும் ஏழு தலைமுறைகள் ஆகும் என்பது என் எண்ணம்.

  3. 2009 October 31

    நன்றாக எழுதியுள்ளீர்கள் நண்பரே. இது போன்று மூட நம்பிக்கைகளைப் பற்றி நானும் நிறைய எழுதிக் கொண்டிருக்கிறேன்……..

  4. 2009 October 31

    அன்பருக்கு,

    வாருங்கள் ஐயா.

    வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.

  5. 2009 November 3
    trpattabiraman permalink

    இன்று சோதிடம் மக்கள் சோரம் போவதற்கு உரிய சாதனமாக போய்விட்டது.
    தொலை காட்சிகள், பதிரிகைகள், வானொலிகள்,சோதிடர்களுக்கு முக்கியத்வம் அளித்து இருவரும் ஒரு சேர மக்களிடம் பகல் கொள்ளை அடிக்கின்றனர்.
    சாமி விவேகானந்தர் அன்றே சொன்னார். உனக்கு மனநிலை/உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவரிடம் செல்,சோதிடரிடம் செல்லாதே என்று. யார் கேட்கிறார்கள்/ எல்லாம் அவரவர் தலைஎழுத்து.

  6. 2009 November 3

    அன்பருக்கு,

    //இன்று சோதிடம் மக்கள் சோரம் போவதற்கு உரிய சாதனமாக போய்விட்டது.
    தொலை காட்சிகள், பதிரிகைகள், வானொலிகள்,சோதிடர்களுக்கு முக்கியத்வம் அளித்து இருவரும் ஒரு சேர மக்களிடம் பகல் கொள்ளை அடிக்கின்றனர்.//

    வருவாய்தான் முக்கியம் அவர்களுக்கு; சமுதாய நலன் குறித்து எண்ணினால் வருவாய் என்னாவது?

    //சாமி விவேகானந்தர் அன்றே சொன்னார். உனக்கு மனநிலை/உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவரிடம் செல்,சோதிடரிடம் செல்லாதே என்று. யார் கேட்கிறார்கள்/ எல்லாம் அவரவர் தலைஎழுத்து.//

    சோதிடர்களின் செல்வாக்குக்கு முன் விவேகானந்தர் போன்றோரின் குரல் எடுபடாது ஐயா.

  7. 2009 November 17

    சரியான சவுக்கடி. அருமை.

  8. 2009 November 17

    அன்பருக்கு,

    வாருங்கள் ஐயா. இந்தப் பக்கம் உங்களைப் பார்த்து நீண்ட காலம் ஆயிற்று. உங்கள் நலம் விழைகிறேன்; வாழ்க.

  9. 2009 November 17

    //திருத்தம் ஏற்படும் என்று நம்பிச் செய்தால் ஏமாற்றம்தான் விளையும். திருத்தம் ஏற்பட இன்னும் ஏழு தலைமுறைகள் ஆகும் என்பது என் எண்ணம்.//

    இதுபோன்ற பதிவுகளை பதிவுலகத்தில் எழுதுவதே தப்புதானோ என்று தோன்றுகிறது. காரணம்: இங்கேதான் நிறைய சோதிட அன்பர்கள் – அன்பர்கள் மட்டுமல்ல; அதுக்கும் மேலே – இருப்பதாகத் தெரிகிறது.

  10. 2009 November 17

    அன்பருக்கு,

    வருங்கள் ஐயா.

    //இதுபோன்ற பதிவுகளை பதிவுலகத்தில் எழுதுவதே தப்புதானோ என்று தோன்றுகிறது. காரணம்: இங்கேதான் நிறைய சோதிட அன்பர்கள் – அன்பர்கள் மட்டுமல்ல; அதுக்கும் மேலே – இருப்பதாகத் தெரிகிறது.//

    தப்புத்தான் ஐயா; ஒப்புக்கொள்கிறேன்.

    கடந்த நாற்பது ஆண்டுகளாக இந்தச் சங்கை ஊதிக்கொண்டு இருக்கிறேன். ஊதி ஊதிப் பழக்கமாகிவிட்டது. ஊதுகிற சங்கை ஊதாமல் இருப்பதும் தப்புத்தான் என்று தோன்றுகிறது. அதனால்தான் அவ்வப்போது ஊதிக்கொண்டிருக்கிறேன். ஆனால் திருத்தம் ஏற்படும் என்னும் நம்பிக்கை இல்லை.

    வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.

Leave a Reply

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS