இடுகாடே சுடுகாடாக…!

2009 October 19
by அ.நம்பி

vg01 vg02 vg03 vg04  vg07 vg05 vg08 vg06

vg11

ஆண்டு ஒன்றுக்கு நூறு கோடி விலங்குகள்; பறவைகள்.

மீன்களும் பிற நீர்வாழ் உயிரினங்களும் இந்தக் கணக்கில் சேரா.

என்ன கணக்கு இது?

இது ஜெர்மானியர்களின் சாப்பாட்டுக் கணக்கு!

ஓர் ஆண்டில் அவர்களால் உண்ணப்படும் விலங்குகளும் பறவைகளும் நூறு கோடிக்கும் மேலாகும்.

மாடு – 4
கன்று – 4
செம்மறி ஆடு – 4
பன்றி – 46
வாத்து – 37
வான்கோழி – 46
பெருந்தாரா (goose) – 12
கோழி – 945

இந்தப் பட்டியல்…?

ஓர் ஆண்டில் சராசரியாக ஜெர்மானியர் ஒருவர் உண்டு   தின்று தீர்க்கும் உயிரிகள் இவை; ஆயிரத்துக்கும் மேல்; சரியாகச் சொன்னால் 1098 விலங்குகளும் பறவைகளும் ஆகும்.

ஜெர்மனியில் உள்ள மரக்கறி உண்போர் கழகம் மேற்கொண்ட ஓர் ஆய்வில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன.

கிழமைக்கு (வாரத்துக்கு) ஒரு நாள் ஊன் உண்பதைத் தவிர்க்குமாறு அக்கழகம் ஜெர்மானியர்களை வேண்டுகிறது; இதன்வழி ஓர் ஆண்டுக்குப் பதினைந்து கோடி எழுபது இலட்சம் பறவைகள், விலங்குகள் ஆகியவற்றின் உயிரைக் காப்பாற்ற முடியும்.

எட்டுக் கோடி முப்பது இலட்சம் ஜெர்மானியர்களுள் ஏறத்தாழ அறுபது இலட்சம் பேர் மரக்கறி உணவு உண்போர் ஆவர்.

மரக்கறி உணவு உண்போரின் எண்ணிக்கை உலகிலேயே இந்தியாவில்தான் மிகுதி; நாற்பது விழுக்காட்டு இந்தியர்கள் ஊன் உண்பதில்லை.

மனிதன் இறந்துபோனால் பிணம் என்று சொல்கிறோம்.

இறந்தவனுடைய உடலை அவன் பெயரைக் கொண்டு சுட்டுவது இல்லை.

`பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டு’ என்பார் திருமூலர்.

பிணங்களை இடுகாட்டில் புதைப்பதும் சுடுகாட்டில் எரிப்பதும் நம் வழக்கம்.

பறவைகள், விலங்குகள் ஆகியவற்றின் பிணங்களை நம் வயிற்றில் புதைக்கிறோம்; வயிற்றிலேயே எரிக்கிறோம்.

ஒரே இடத்தில் புதைப்பதும் எரிப்பதும் நடைபெறுமானால் அந்த இடத்துக்கு முதுகாடு என்று பெயர்.

வாழ்நாள் முழுதும் நெஞ்சுக்குக் கீழே முதுகாட்டைச் சுமந்துகொண்டு வாழ்கிறோம்; அங்கே இடைவிடாமல் பிணங்கள் புதைக்கப்படுகின்றன; எரிக்கப்படுகின்றன.

நாம் நடமாடும் முதுகாடோ?

- அ. நம்பி

8 Responses leave one →
  1. 2009 October 20
    ஆகாய மனிதன் !!! permalink

    இந்தியர்களில், நாற்பது விழுகாடுகளில் அனைத்து மத வழிபடுவோரும் அடங்கும்..

  2. 2009 October 20
    tr pattabiraman permalink

    ஜெர்மானியர்கள் தங்கள் வயிற்றை சுடுகாடு ஆக்குவது ஒருபுறம் இருக்கட்டும்
    புத்தனும் , வள்ளுவரும் , வள்ளலாரும் பிறந்த இந்திய மண்ணில் இன்று வயிற்றுக்காக ஈவிரக்கமின்றி உயிர்களை கொன்று தின்னும் கூட்டம் பெருகிவிட்டதே அதற்க்கு என்ன சொல்ல ?
    மனிதனை கருணை கொலை செய்ய்ய சட்ட விதிகளை திருத்த முற்ப்படும் பகுத்தறிவு படைத்தவர்கள் என்று பறைசாற்றி கொள்ளுபவர்கள் பிராணிகளை கொடூர முறையில் கொன்று தின்பது மிகுந்த வேதனையை தருகிறது .எல்லா உயிரும் உயிரே தவிர வடிவங்களில்தான் வேறுபாடு என்பதை எப்போது இந்த மனித குலம் உணருமோ தெரியவில்லை
    அடிமாடுகளின் ரத்தக்கண்ணீர் கதையை கேளுங்கள்
    தமிழ் நாட்டிலிருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான மாடுகள் இறைச்சிக்காக கேரளாவிற்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன அவைகள் அங்கு ஈவிரக்கமின்றி கொடூரமாக கொலை செய்யப்பட்டு அதன் இறைச்சிகள் வளைகுடா நாடுகளுக்கும் மற்றும் கீழை நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.இன்று உலகில் அசைவ உணவு உண்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.நம் வீட்டில் நமக்கு பலவகையிலும்பயன்தந்துவிட்டு இனி பயன் இல்லை என்ற நிலையில் அவைகளை மாட்டு சந்தையில் விற்றுவிடுவது நன்றி கெட்ட செயலாகும்.நாம் உண்ணும் உணவின் கழிவுகளை மட்டும் அவைகளுக்கு உணவாக அளித்தாலே அவைகள்கடைசி காலம் வரை காலம்தள்ளும். இறந்த பிறகு அவைகளை இறைச்சி கூடத்திற்கு அனுப்புவதில் எந்த பிரச்சினையுமில்லை. ஆனால் அவைகளை ஈவிரக்கமின்றி ஒரே லாரியில் அடைத்து சென்று இறைச்சிக்கூடத்தில் இரும்பு சம்மட்டியால்தலையில் அடித்து கொல்லும் கோரக்காட்சி சமீபத்தில் அம்ரிதா தொலைகாட்சியில் ஒளிபரப்பப்பட்டது.எனவே தாங்கள் ஆசையோடு வளர்த்த மாடுகள் கேரளாவில் போய் கொடூரமாக சாகத்தான் வேண்டுமா என்பதை அதை விற்பவர்கள் சிறிது சிந்தித்து பார்த்தல் நலம். ஆனால் அசைவ உணவு உண்பவர்கள் மனித நேயத்தை பற்றி பேசத்தான் முடியுமே தவிர அதை அவர்களால் உணர வாய்ப்பில்லை. அருட்ப்ரகாச வள்ளலார் கொல்லா விரதத்தைகைகொள்ள வலியுறுத்தினார் ஆனால் அதை கடைபிடிப்பவர்கள் இவ்வுலகத்தில் வெகு சிலரேயாவர். பசுவை காமதேனு என்றும் , கோமாதா என்றும் ,பசுக்களை பராமரித்து நேசித்த கண்ணபிரானை தெய்வம் என்றும் போற்றி வணங்கும் நம் ஹிந்து சமுதாயம் இந்த கொடுமையை கண்டும் காணாமல் இருப்பதும்பெரும்பாலானோர் அதன் இறைச்சியை உண்டுவிட்டு அவனுக்கு பூஜை செய்வதும் கேலிக்குரியதும் கண்டனதிர்க்குரியதும் ஆகும் அவர்கள் இன்று வளமாக வாழ்ந்தாலும் அது நிச்சயம் போலியானதாகத்தான் இருக்கும் அதன் விளைவுகளை அவர்களோ அல்லது அவர்களின் சந்ததிகளோ ஒரு நாள் அனுபவித்துதான் தீரவேண்டும் என்பது இறைவன் வகுத்த விதி

  3. 2009 October 20

    அன்பருக்கு,

    //இந்தியர்களில், நாற்பது விழுகாடுகளில் அனைத்து மத வழிபடுவோரும் அடங்கும்..//

    ஊன் உண்ணாதோர் குறித்துச் சமய அடிப்படையில் புள்ளி விவரம் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே இந்த நாற்பது விழுக்காடு என்பது எல்லாச் சமயத்தினரையும் உள்ளடக்கியதாக இருக்கும் என்று கொள்வதில் தவறிருக்க முடியாது.

    வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.

  4. 2009 October 20

    அன்பருக்கு,

    //ஜெர்மானியர்கள் தங்கள் வயிற்றை சுடுகாடு ஆக்குவது ஒருபுறம் இருக்கட்டும்//

    `பிணங்களை இடுகாட்டில் புதைப்பதும் சுடுகாட்டில் எரிப்பதும் நம் வழக்கம்.

    பறவைகள், விலங்குகள் ஆகியவற்றின் பிணங்களை நம் வயிற்றில் புதைக்கிறோம்; வயிற்றிலேயே எரிக்கிறோம். ‘

    இவ்வாறு நம்மைத்தான் குறிப்பிட்டேன்; ஜெர்மானியர்களைச் சொல்லவில்லை. ஊன் உண்ணும் பழக்கத்தின் இன்றைய நிலையை விளக்குவதற்காகவே ஜெர்மானியர்களைப் பற்றிய புள்ளி விவரங்களைப் பயன்படுத்திக்கொண்டேன்.

    //புத்தனும் , வள்ளுவரும் , வள்ளலாரும் பிறந்த இந்திய மண்ணில் இன்று வயிற்றுக்காக ஈவிரக்கமின்றி உயிர்களை கொன்று தின்னும் கூட்டம் பெருகிவிட்டதே அதற்க்கு என்ன சொல்ல ?//

    புத்தர் ஊன் மறுத்தார் என்றும் மறுக்கவில்லை என்றும் புத்த சமயத்தில் இருவேறு கருத்துகள் உள்ளன; இது ஆய்வுக்கு உரியது. எனவே புலால் மறுத்தல் குறித்துப் பேசும்போது திருவள்ளுவரோடும் வள்ளலாரோடும் புத்தரையும் சேர்த்துச் சொல்லுதல் கூடாது என்று நினைக்கிறேன்.

    //அடிமாடுகளின் ரத்தக்கண்ணீர் கதையை கேளுங்கள்//

    மிகவும் தெளிவாக விளக்கியுள்ளீர்கள்; உங்கள் வலைப்பக்கத்தில் இதனைத் தனிக்கட்டுரையாக வெளியிடுவது நல்லது.

  5. 2009 October 20
    tr pattabiraman permalink

    புத்தரின் வரலாற்றில் அவர் செல்லும் வழியில் ஒருவன் ஆடுகளை பலியிட கொண்டு செல்லும்போது அதை தடுத்து உயர்ந்த மனித பிறவியான தன்னை அவைகளுக்கு பதிலாக பலியிட சொன்னதாக படித்திருந்ததை வைத்து அவரை வல்லுவரோடு சேர்த்துக்கொண்டேன்.

  6. 2009 October 20

    அன்பருக்கு,

    //புத்தரின் வரலாற்றில் அவர் செல்லும் வழியில் ஒருவன் ஆடுகளை பலியிட கொண்டு செல்லும்போது அதை தடுத்து உயர்ந்த மனித பிறவியான தன்னை அவைகளுக்கு பதிலாக பலியிட சொன்னதாக படித்திருந்ததை வைத்து அவரை வல்லுவரோடு சேர்த்துக்கொண்டேன்.//

    `…According to Theravada, the Buddha allowed his monks to eat pork, chicken and beef if the animal was not killed for the purpose of providing food for monks. Theravada also believes that the Buddha allowed the monks to choose a vegetarian diet, but only prohibited against eating human, elephant, horse, dog, snake, lion, tiger, leopard, bear, and hyena flesh.

    Buddha did not prohibit any kind of meat-eating for his lay followers.

    In Vajrayana, the act of eating meat is not always prohibited.

    The Mahayana schools generally recommend a vegetarian diet, for they believe that the Buddha insisted that his followers should not eat meat or fish….’

    Source:

  7. 2009 October 20
    tr pattabiraman permalink

    எது எப்படி இருந்தாலும் சரி. உள்ளத்தில் உண்மையான அன்பு உடையவன் பிற உயிர்களுக்கு நிச்சயம் துன்பம் விளைவிக்கஇயலாது .

  8. 2009 October 20

    அன்பருக்கு,

    //எது எப்படி இருந்தாலும் சரி. உள்ளத்தில் உண்மையான அன்பு உடையவன் பிற உயிர்களுக்கு நிச்சயம் துன்பம் விளைவிக்கஇயலாது .//

    தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்
    எங்ஙனம் ஆளும் அருள். (251)

Leave a Reply

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS