திருவள்ளுவரின் முதுகுக்குப் பின்னால்…!
கடலைப் பார்க்கிறோம்.
கடற்பாறையில் நிற்கும் திருவள்ளுவரைப் பார்க்கிறோம்.
நாள்தோறும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.
திருவள்ளுவரின் முதுகுக்குப் பின்னால் நடந்துகொண்டிருக்கும் படுகொலைகளைப் பார்த்தோமா?
பார்த்தோம்; பார்த்துக்கொண்டே இருக்கிறோம்.
போக்கிலி ஒருவன் நடுத்தெருவில் அப்பாவி ஒருவனைக் கத்தியால் குத்திக் கிழிப்பதைப் பார்த்துக்கொண்டிருக்கும் கூட்டத்தைப்போல் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
தடுத்து நிறுத்த என்ன செய்தோம்?
திருவள்ளுவருக்குச் சிலை செய்து பார்த்தால் போதுமா?
`செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்’ என்று சொன்னார் திருவள்ளுவர்.
செய்தக்க செய்தோமா?
செய்தக்க அல்லவை செய்யாது இருந்தோமா?
இன அழிவையும் கட்சி அரசியல் ஆக்கினோம்.
பிணங்களை வைத்து அரசியல் வாணிகம் செய்து கட்சிகளை வளர்க்க முயன்றோம்.
வேறென்ன செய்தோம்?
திருவள்ளுவர் சொன்னது உலகத்துக்குத்தானா?
நமக்கு இல்லையா?
திருக்குறளை உலகப் பொதுமறை என்று நாம் சொல்வதன் பொருள் இதுதானா?
`வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
உள்ளதும் கெட்ட தமிழ்நாடு’ என்றார் கவியரசு கண்ணதாசன்.
கவியரசு சொன்னது பொய்க்கவில்லை.
- அ. நம்பி
//`வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
உள்ளதும் கெட்ட தமிழ்நாடு’ //என்றார் கவியரசு கண்ணதாசன்.
வள்ளுவனை உலகிற்கு தராமல் விட்டிருந்தால் தமி்ழ் நாடு மேலும் சிறந்திருக்குமோ?
அன்பருக்கு,
பொதுமறை என்று வெறுமனே புகழ்பாடிக் கொண்டிராமல் தமிழரின் தனியுரிமை திருக்குறள் என்று எண்ணி இருந்தால் எவ்வாறு அதனை வாழ்க்கைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஒருவேளை நம் இனத்தார் சிந்தித்துச் செயல்பட்டிருக்கக்கூடும்.