எண்ணத்தில் கடவுள்
(திருமுறை விளக்கம்: 17)
கடவுளை வணங்கி நல்ல வாழ்க்கை வாழச் சொல்வது சமயம்.
கடவுளை வணங்குவது எப்படி என்று சமயம் சொல்லும்.
நல்ல வாழ்க்கை வாழ்வது எப்படி என்றும் சமயம் சொல்லும்.
நல்ல நினைப்பும் நல்ல பேச்சும் நல்ல செயலும் நல்ல வாழ்க்கைக்கு அடிப்படை.
இவற்றைப் புண்ணியம் என்பார்கள் சான்றோர்கள்.
தீய நினைப்பும் தீய பேச்சும் தீய செயலும் வாழ்க்கையைக் கெடுத்துவிடும்.
இவற்றைப் பாவம் என்பார்கள் சான்றோர்கள்.
புண்ணியம் நமக்கு நன்மை தரும்.
பாவம் நமக்குத் தீமை தரும்.
புண்ணியம் செய்யத் தூண்டுவது கடவுள் நெறி.
பாவம் செய்யாமல் இருக்க உதவுவது கடவுள் நெறி.
கடவுள் நெறியே சமய நெறி.
கங்கை யாடிலென் காவிரி யாடிலென்
கொங்கு தண்கும ரித்துறை யாடிலென்
ஓங்கு மாகட லோதநீ ராடிலென்
எங்கும் ஈசன் எனாதவர்க் கில்லையே. (5.99.2)
கங்கை ஆடில் என் காவிரி ஆடில் என்
கொங்கு தண் குமரித்துறை ஆடில் என்
ஓங்கு மாகடல் ஓத நீர் ஆடில் என்
எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே.
‘கங்கையில் நீராடினால் என்ன, காவிரியில் நீராடினால் என்ன, மணமும் குளிர்ச்சியும் பொருந்திய குமரித்துறையில் நீராடினால் என்ன, ஓங்குகின்ற பெரிய கடலின் அலைநீரில் நீராடினால் என்ன, எங்கும் இறைவன் இருக்கின்றான் என்று எண்ணாதவர்க்கு இவற்றால் பயன் இல்லை.’
ஆடில் – நீராடினால்
என் – என்ன
கொங்கு – மணம்
தண் – குளிர்ச்சி
குமரி – கன்னியாகுமரி: தமிழ்நாட்டின் தென்கோடியில் உள்ளது
ஒங்கு – ஓங்கு என்னும் சொல்லின் குறுக்கல்.
மா – பெரிய
ஓதம் – அலை
ஓதநீர் – அலைநீர்
எனாதவர்க்கு – என்னும் நினைவு இல்லாதவர்க்கு; என்று எண்ணாதவர்க்கு
சமயத் தொடர்புள்ள பல செயல்கள் புண்ணியச் செயல்கள் எனப்படும்.
அவற்றுள் ஒன்று புண்ணிய நீர்த்துறைகளில் நீராடுதல் ஆகும்.
குறிப்பிட்ட சில கடற்றுறைகளையும் ஆறுகளையும் குளங்களையும் புண்ணிய தீர்த்தங்கள் என்பார்கள் பெரியவர்கள்.
புண்ணிய நீர்த்துறைகளில் மூழ்கிக் குளிப்பதால் `பாவம் தொலையும், புண்ணியம் சேரும்’ என்று சொல்வார்கள்.
இப்படிச் சொல்வதில் உண்மை உண்டோ?
உண்டு.
கடவுளை எண்ணிச் செய்யும் எல்லாச் செயல்களும் புண்னியச் செயல்களே.
கடவுளிடம் உண்மையான அன்புகொண்டு செய்யும் எந்தச் செயலாலும் நன்மையே விளையும்.
வெறும் நீரில் குளிப்பதால் உடலில் சேர்ந்திருக்கும் அழுக்கு நீங்கலாம்.
உள்ளத்தில் சேர்ந்திருக்கும் அழுக்கு நீங்குமோ?
நீங்காது.
உள்ளத்தில் சேர்ந்திருக்கும் அழுக்கை நீக்கும் ஆற்றல் நீருக்கு இல்லை.
கடவுளிடம் நாம் கொள்ளும் உண்மையான அன்பால் மட்டுமே உள்ளத்தின் அழுக்கைக் கழுவ முடியும்.
கடவுளிடம் அன்பைப் பெருக்குவதற்காகவே புண்ணிய நீர்த்துறைகளில் நீராடச் சொல்வார்கள் சான்றோர்கள்.
நீராடுவதற்கு முன்னும் கடவுள் நினைப்பு.
நீராடும்போதும் கடவுள் நினைப்பு.
நீராடிய பின்னும் கடவுள் நினைப்பு.
`இறைவர் எங்கும் நிறைந்து இருக்கின்றார்; அவரின் திருவருள் பெறுவதற்காகவே நீராடுகிறேன்’ என உண்மையான அன்போடு எண்ணி நீராடவேண்டும்.
ஆண்டவனை மறந்துவிட்டு ஆற்றில் குளிப்பதால் என்ன பயன்?
கடவுளை மறந்துவிட்டுக் கடலில் குளிப்பதால் என்ன பயன்?
எங்கும் இருக்கும் இறைவரிடம் அன்புகொள்ளாமல் ஆற்றிலும் கடலிலும் குளத்திலும் முழுகி எழுவதால் எந்தப் பயனும் விளையாது.
எல்லாம் வல்ல இறைவரிடம் மாறாத அன்புள்ளவர்களுக்கு மட்டுமே கங்கையும் காவிரியும் குமரித்துறையும் புண்ணிய நீர்த்துறைகள்.
இவற்றில் நீராடுவதால் மட்டுமே புண்ணியத்தை அடையலாம் என்று நினைப்பவர்கள் கடவுளைவிட இவற்றையே பெரிதும் நம்புபவர்கள்.
இவர்கள் எந்த நன்மையும் அடைவதில்லை.
`எந்த நன்மையும் இல்லை’ என உறுதியாகச் சொல்கிறார் திருநாவுக்கரசர் பெருமானார்.
கங்கை வெறும் ஆறுதான்.
காவிரி வெறும் ஆறுதான்.
குமரித்துறை வெறும் கடல்தான்.
கடவுளிடம் நாம் கொள்ளும் அன்பைப் பொறுத்தே இவற்றில் நாம் பெறும் நன்மை இருக்கிறது.
வெறும் நீர் சுவைநீர் ஆகுமோ?
ஆகும்.
சேர்க்க வேண்டுவனவற்றைச் சேர்த்தால் வெறும் நீரும் சுவைநீர் ஆகும்.
வெறும் நீர் புண்ணியநீர் ஆகுமோ?
ஆகும்.
சேர்க்க வேண்டுவதைச் சேர்த்தால் வெறும் நீரும் புண்ணியநீர் ஆகும்.
சேர்க்க வேண்டுவது?
அன்பு!
- அ. நம்பி
அழகாக சொன்னீர்கள் ,
இது எல்லாருக்கும் தெரிய வேண்டிய ஒன்று.
இன்று எல்லாம் செய்கிறார்கள் கடவுளை மட்டும் மறந்துவிட்டு .
அன்பருக்கு,
வாருங்கள் ஐயா.
//இன்று எல்லாம் செய்கிறார்கள் கடவுளை மட்டும் மறந்துவிட்டு .//
நினைக்கும் காலம் திண்ணமாக வரத்தான் செய்யும்.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.