அகத்தில் அன்பு

2009 April 30

wt01

(திருமுறை விளக்கம்: 16)

அன்பு நிறைந்த உள்ளம் இறைவர் எழுந்தருளும் திருக்கோயில் ஆகும்.

உள்ளத்தில் அன்பை நிறைத்தவர்கள் இறைவரைத் தேடத் தேவையில்லை.

இறைவர் விரும்பும் இருப்பிடமாக உள்ளத்தை ஆக்கியவர்கள் இறைவரை எங்கும் உணர்வார்கள்.

“நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன்" (4.1.2) என அன்புநெறியைச் சொல்வார் திருநாவுக்கரசர்.

“தொண்டர் அகமலால் கோயில் இல்லை" (4.40.8) என மேலும் தெளிவாக விளக்குவார்.

அன்பு இல்லாதவர்கள் கடவுளைத் தேடித்தான் ஆகவேண்டும்.

அன்பு குறைந்தவர்களும் கடவுளைத் தேடித்தான் ஆகவேண்டும்.

தேடிச் சென்று திருந்தடி ஏத்துமின்
நாடி வந்தவர் நம்மையும் ஆட்கொள்வர்
ஆடிப் பாடியண் ணாமலை கைதொழ
ஓடிப் போம்நம துள்ள வினைகளே.
(5.5.5)

தேடிச் சென்று திருந்தடி ஏத்துமின்
நாடி வந்து அவர் நம்மையும் ஆட்கொள்வர்
ஆடிப் பாடி அண்ணாமலை கைதொழ
ஓடிப்போம் நமது உள்ள வினைகளே.

`தேடிச் சென்று இறைவர் திருவடிகளைப் புகழ்ந்து போற்றுங்கள்; நம்மையும் அவர் நாடிவந்து ஆட்கொள்வார்; ஆடியும் பாடியும் திருவண்ணாமலையைக் கைகூப்பித் தொழுவோமானால் நம் வினைகள் ஓடிப் போகும்.’

திருந்தடி – செம்மையான திருவடிகள்: என்றும் செம்பொருளாக உள்ள திருவடிகள்

ஏத்துமின் – புகழ்ந்து போற்றுங்கள்

வந்தவர் – வந்து அவர்: அவர் வந்து

ஆட்கொள்வார்: இறையருளுக்கு உரியவர்களாக ஆக்குவார்

அண்ணாமலை – ஊரின் பெயர்: திருவண்ணாமலையில் எழுந்தருளியுள்ள இறைவர்

“தேடிச் சென்று" என்பதன்வழி `உண்மையைத் தேடிச் செல்லுங்கள்’ எனக் குறிப்பாகச் சொல்கிறார் அப்பர் பெருமான்.

அன்பில்லாமல் தேட முடியுமோ?

கண்களைக் கட்டிக்கொண்டு ஒளியைத் தேடுவது போன்றது இந்த முயற்சி.

அன்பில்லாமல் தேடுவோமானால் எங்கும் நிறைந்திருக்கும் இறைவர் எங்குமே இல்லாததுபோல் உணர்வோம்.

தொடர்ந்து தேடுவோமானால் நம் உள்ளத்தில் இறைவர் இல்லை என்பது தெரியவரும்.

`நம் உள்ளத்தில் இறைவர் இல்லை; அதனாலேயே அவர் எங்குமே இல்லாதவர்போல் இருக்கிறார்’ என்பதும் தெரியவரும்.

ஏன் இறைவர் நம் உள்ளத்தில் இல்லை என உண்மையைத் தேடவேண்டும்.

தேடினால் நம் உள்ளத்தில் அன்பு இல்லை என்பதைத் தெளிவாக உணர்வோம்.

“தேடிக் கண்டுகொண்டேன், திருமாலொடு நான்முகனும் தேடித் தேடொணாத் தேவனை என்னுளே தேடிக் கண்டுகொண்டேன்" (4.9.12) என்பது அருளரசர்தம் அருள்மொழி.

அப்பர் சொல்வது தமக்காக அன்று; நமக்காகவே.

தேடிச் சென்று இறைவரைப் புகழ்ந்து போற்றவேண்டும்.

“தேடிச் சென்று திருந்தடி ஏத்துமின்" என்கிறார் பெருமானார்.

இறைவரைப் புகழ்ந்து போற்றுவது எதற்கு?

புகழ்ந்து பேசும் பேச்சைக் கேட்டு மனிதர்கள் மயங்கக்கூடும்.

இறைவரும் புகழ்ச்சிக்கு மயங்குவாரோ?

“வேண்டுதல் வேண்டாமை இலான்" (4) என்பார் திருவள்ளுவர்.

“வேண்டாமை வேண்டுவதும் இல்லான்" (6.46.9) என்பார் திருநாவுக்கரசர்.

திருவள்ளுவர் சொல்லும் கடவுளும் திருநாவுக்கரசர் சொல்லும் கடவுளும் ஒரே கடவுளே.

ஒரே முழுமுதற்பொருளைப் பேசுவதனால் இருவரின் கருத்தும் ஒன்றாக இருக்கிறது.

ஒரே கடவுளைப் பேசுவதனால் இருவரின் சொற்களும் ஒன்றாக இருக்கின்றன.

வேண்டுதலும் வேண்டாமையும் இல்லாத இறைவர் நம் புகழ்ச்சிக்கு மயங்குபவராக இருக்கமாட்டார்.

வேண்டாமையும் வேண்டுவதும் இல்லாத கடவுள் புகழ்ச்சிக்கு அப்பாற்பட்டவராகத்தான் இருக்கவேண்டும்.

பற்றற்ற கடவுள் புகழ்ச்சியைக் கடந்தவராகத்தான் இருக்கவேண்டும்.

`கடவுள் இப்படித்தான் இருக்கவேண்டும்’ என நாமே முடிவு செய்யத் தேவையில்லை.

கடவுளைப்பற்றி வரையறுத்துக் கூற நமக்கு எந்தத் தகுதியும் இல்லை.

wt02

நிறைமொழி மாந்தர் ஆணையில் கிளந்த மறைமொழி’தான் நமக்கு வழிகாட்டி.

“புகழ்ச்சியைக் கடந்த போகமே" (8.37.4) என்பது நிறைமொழி மாந்தராகிய மாணிக்கவாசகர்தம் ஆணையில் கிளந்த மறைமொழி.

கடவுள் புகழ்ச்சியைக் கடந்தவர்.

ஐயம் இல்லை.

புகழ்ச்சியைக் கடந்தவர் ஆதலால் நம் புகழ்ச்சிக்குக் கடவுள் மயங்குவது இல்லை.

எனவே கடவுளைப் புகழ்ந்து போற்றுவது அவரை மயக்கி வேண்டுவனவற்றைப் பெற்றுக்கொள்வதற்காக அன்று என்பது தெளிவு.

`செந்தமிழும் நாப்பழக்கம்’ என்பார்கள் பெரியவர்கள்.

செந்தமிழைப் பேசப் பேச நம் நா திருத்தமுறும்.

நம்மால் பேசப்படுவதால் செந்தமிழ் திருத்தமுறுவது இல்லை.

நாம் பேசினாலும் பேசாவிட்டாலும் செந்தமிழ் என்றும் செம்மையான தமிழாகத்தான் இருக்கும்.

செம்பொருளாகிய இறைவரின் புகழைப் பேசப் பேச நாம் திருத்தம் அடைவோம்.

நம்மால் புகழப்படுவதால் செம்பொருள் உயர்வுறுவது இல்லை.

நாம் புகழ்ந்தாலும் புகழாவிட்டாலும் செம்பொருள் என்றும் செம்மையான பொருளாகத்தான் இருக்கும்.

தமிழைப் பேசப் பேச நம் நா திருத்தமுறுவதுபோல் இறைவரைப் புகழப் புகழ நம் எண்ணமும் சொல்லும் செயலும் திருத்தமுறும்.

திருத்தம் தூய்மைக்கு வழி.

நம்மைத் தூய்மையாக்கிக்கொள்ளவே புகழ்ச்சியைக் கடந்த பரம்பொருளைப் புகழ்ந்து போற்றுகிறோம்.

எண்ணத்திலும் சொல்லிலும் செயலிலும் ஒட்டியிருக்கும் அழுக்கைக் கழுவிக்கொள்ளவே கடவுளைப் புகழ்ந்து போற்றுகிறோம்.

“தகவுடையார் நெஞ்சிருக்கை கொண்டான் கண்டாய்" (6.39.6) என்பது அப்பர் அருள்மொழி.

`தகுதி உடையவர்கள் நெஞ்சை இறைவர் இருப்பிடமாகக் கொள்வார்’ எனத் தெளிவாகவே சொல்கிறார்.

அடிப்படைத் தகுதி அன்பே என்பது சைவநெறி.

அன்பு இருக்குமானால் ஒழுக்கம் முதலிய பிற தகுதிகள் எளிதாக வந்து சேரும். 

அன்பு மிகுந்த உள்ளம் நீர் மிகுந்த சோலை.

அன்பு இல்லாத உள்ளம் நீர் இல்லாத பாலை.

நீரைத் தேடும் பறவை சோலையைத்தான் நாடும்; பாலையை நாடாது.

அன்பை நாடும் இறைவர் அன்பு நிறைந்த உள்ளத்தைத்தான் நாடுவார்.

தாமே நாடி வருவார்.

“நாடி வந்து அவர் நம்மையும் ஆட்கொள்வர்" என்கிறார் பெருமானார்.

அன்பு பெருகுமானால் ஆடத்தோன்றும்; பாடத்தோன்றும்.

அன்பின் பெருக்கத்தால் ஏற்படும் பெருமகிழ்ச்சியில் திளைத்திருப்பது ஆடுதல் எனப்படும்.

இத்தகைய இன்பத்தில் திளைத்து அருந்தமிழ்ப் பாடல்களைச் சொல்வது பாடுதல் எனப்படும்.

இன்பம் மிகுந்து இன்பத் தமிழால் பாடி இருகை கூப்பித் தொழுவது வழிபாடு.

இவ்வண்ணம் ஆடிப் பாடி இறைவரைத் தொழுதால் உள்ள வினைகள் ஓடிப் போகும்.

அன்பு இனியது.

அன்பில் விளையும் இன்பம் இனியது.

இன்பத்தில் பாடும் தமிழ் இனியது.

தமிழை விரும்பும் இறைவர் இனியவர்.

இறைவரைப் போற்றி வணங்குபவர்கள் இனியவர்கள்.

இனியவர்கள் வாழ்வில் வினைக்கு இடமில்லை.

- அ. நம்பி

 

No comments yet

Leave a Reply

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS