நெஞ்சில் சோர்வு
(திருமுறை விளக்கம்: 15)
இன்ன சாதியார் இன்னவற்றைச் செய்யவேண்டும், இன்னவற்றைச் செய்யக்கூடாது என்னும் வரையறை சாதியமைப்பில் உண்டு.
சாதியமைப்பில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழித்தலும் அறம் எனப்படும்.
இந்த அறத்தைப் பிடித்து ஒழுகுதல் ஒழுக்கம் ஆகும்.
விலக்கியன செய்தல் குற்றமாகக் கொள்ளப்படும்.
குற்றத்திற்குத் தண்டனை உண்டு.
குற்றத்திற்கேற்ற தண்டனை கொடுத்தல் நீதி எனப்படும்.
இந்த அறமும் ஒழுக்கமும் குற்றமும் தண்டனையும் நீதியும் சாதியின் அடிப்படையில் அமைந்தவை ஆதலால் சாதிக்குச் சாதி வேறுபடும்.
`ஒரு குலத்துக்கு ஒரு நீதி’ என்னும் இச்சிந்தனை, `ஒன்றே குலம்’ எனும் சைவச் சிந்தனைக்கு முற்றிலும் மாறுபட்டது.
எனவே சாதியின் அடிப்படையில் சொல்லப்படும் அறம் முதலாயினவற்றைச் சைவச் சான்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஏற்றுக்கொள்ளாதது மட்டுமன்று, வலிமையாக எதிர்த்தும் நிற்கிறார்கள்.
குலங்கள் என்செய்வ குற்றங்கள் என்செய்வ
துலங்கி நீநின்று சோர்ந்திடல் நெஞ்சமே
இலங்கு சேறையிற் செந்நெறி மேவிய
அலங்க னாருளர் அஞ்சுவ தென்னுக்கே. (5.77.8)
குலங்கள் என்செய்வ குற்றங்கள் என்செய்வ
துலங்கி நீ நின்று சோர்ந்திடல் நெஞ்சமே
இலங்கு சேறையில் செந்நெறி மேவிய
அலங்கனார் உளர் அஞ்சுவது என்னுக்கே.
`நெஞ்சமே, குலங்கள் என்ன செய்ய வல்லன? குற்றங்கள் என்ன செய்ய வல்லன? நீ கலங்கிச் செயலற்றுத் தளராதே! விளங்கும் திருச்சேறையில் செந்நெறியில் எழுந்தருளியுள்ள இறைவர் உள்ளார்; அஞ்சுவது எதற்கு?’
குலங்கள் – சாதிகள்
குற்றங்கள் – சாதிக்கட்டுப்பாட்டை மீறுவதால் வருவனவாகச் சொல்லப்படுபவை
என்செய்வ – என்ன செய்ய வல்லன
துலங்கி – கலங்கி
நின்று – செயலற்று
சோர்ந்திடல் – சோராதே, தளராதே
இலங்கு – விளங்கும்
சேறை – ஊரின் பெயர்: உடையார்கோயில் என இப்போது வழங்கப்பெறும்
செந்நெறி – திருச்சேறையில் உள்ள திருக்கோயில்
மேவிய – சேர்ந்த
அலங்கனார் – இறைவர்
உளர் – உள்ளார்
என்னுக்கு – எதற்கு
பிறப்பால் வருவது சாதி என்று சொல்லப்படுவதால் சாதியிலிருந்து தாம் நீங்குவதோ தம்மிலிருந்து சாதியை நீக்குவதோ இயலாது என்று எண்ணத் தலைப்பட்டார்கள் பலர்.
சாதியைப் பேணுவதாலும் சாதியின் அடிப்படையில் கூடி ஒரு குழுவாக வாழ்வதாலும் நன்மைகள் விளையும் (கூடி வாழ்ந்தால் கோடி நன்மை?) என நம்பியதால் சாதிப்பற்று மிகச் செழிப்பாக வளர்ந்தது.
சாதியமைப்பு என்பது அறிவின் திரிபு.
சாதியுணர்வு என்பது அறிவின் மயக்கம்.
சாதிப்பற்று என்பது மயக்கத்தின் உச்சம்.
`சாதியால் நன்மை உண்டு’ என நம்பிச் சாதிப்பற்றோடு வாழ்பவர்களை நோக்கிக் "குலங்கள் என்செய்வ" என வினாவுகிறார் திருநாவுக்கரசர் பெருமானார்.
`சாதியால் நன்மை விளையும் என மயங்கிக் கிடப்பவர்களே, இந்தச் சாதிகள் உங்களுக்கு என்ன நன்மை செய்ய வல்லன?’ என்பது பெருமானாரின் முதல் வினா.
`சாதிக் கட்டுப்பாட்டை மீறுவது குற்றம்; அதனால் தீமையே விளையும்’ என நம்பிச் சாதியைத் துறக்க மறுப்பவர்களை நோக்கிக் "குலங்கள் என்செய்வ" என வினாவுகிறார் அருளரசர்.
`சாதிக் கட்டுப்பாட்டை மீறுவது குற்றம் ஆகாது; நீங்கள் சாதிக் கட்டுப்பாட்டை மீறுவது சாதிப் பற்றாளர்கள் பார்வையில் குற்றங்களாகப் பட்டாலும் அக்குற்றங்கள் உங்களுக்கு என்ன தீமை செய்ய வல்லன?’ என்பது பெருமானாரின் அடுத்த வினா.
இரண்டு வினாக்களைத் தொடர்ந்து "துலங்கி நீ நின்று சோர்ந்திடல்" என அழுத்தமாகச் சொல்கிறார்.
`சாதிகளால் உங்களுக்கு எந்த நன்மையும் வாராது.
`அவற்றின்பால் கொண்டுள்ள பற்றை ஒழியுங்கள்.
`அவற்றை முழுமையாக உதறிவிடுங்கள்.
`சாதிக் கட்டுப்பாட்டை மீறுவதால் உங்களுக்கு எந்தத் தீமையும் சேராது.
`மீறுவது குற்றம் அன்று.
`முழுமையாக மீறுங்கள்.
`நன்மை இழப்போமோ, தீமை அடைவோமோ என்று கலங்காதீர்கள்.
`கலங்கிச் செயல் அழியாதீர்கள்.
`செயலற்றுத் தளராதீர்கள்.’
இது அருளரசரின் ஆணை.
சைவம் செய்ததோ சாதி?
சைவத்தில் உள்ளதோ சாதி?
அன்று, அன்று!
எனின் அன்புநெறிக்கு முற்றிலும் முரணான ஒன்றைக் கைவிடுவதற்குத் தயங்கலாமோ?
தயக்கம் வருவதற்குக் காரணம் அச்சம்.
அச்சம் வருவதற்குக் காரணம் சாதிக் காவலர்கள்.
`சாதியை எதிர்த்து நில்லுங்கள்; எதிர்த்து நின்று வெல்லுங்கள்.
`சாதிக் காவலர்களையும் எதிர்த்து நில்லுங்கள்; எதிர்த்து நின்று வெல்லுங்கள்.
`தடையையும் எதிர்ப்பையும் ஆண்மையோடு எதிர்கொள்ளுங்கள்.
`இறைவர் இருக்கிறார்.
`எதற்கு அஞ்சுகிறீர்கள்?’
அப்பர்பிரான் கேட்கிறார்.
ஏதும் செய்ய இயலாமல் செயலற்றுக் கிடப்பவர்களுக்கு உரமும் எழுச்சியும் ஊட்டிச் செயலாற்றத் தூண்டுவதற்காகவே "அலங்கனார் உளர் அஞ்சுவது என்னுக்கே" என அழுத்தமாகக் கேட்கிறார்.
அறிவழிந்து மயங்கிக் கிடப்பவர்களுக்கு அறிவு கொளுத்துவதற்காகவே "அலங்கனார் உளர் அஞ்சுவது என்னுக்கே" என உறுதியாகக் கேட்கிறார்.
கடவுள்பால் நம்பிக்கை வைத்துச் சாதிப்பற்றை உதறி எறியவும் சாதிக் கட்டுப்பாட்டைத் தகர்த்து எறியவும் முன்வரச் செய்வதற்காகவே "அலங்கனார் உளர் அஞ்சுவது என்னுக்கே" எனத் திண்மையாகக் கேட்கிறார் பெருமானார்.
அன்புடைமையும் அறிவாற்றலும் அஞ்சாமையும் செயலாண்மையும் உடையவர்களே உண்மைச் சைவர்கள்.
அன்புநெறியில் நிற்பவர்களுக்கு இறைவர் என்றும் துணையிருப்பார்.
அப்பர் ஆணை உள்ளது.
அலங்கனார் உள்ளார்.
அஞ்சுவது என்னுக்கு?
- அ. நம்பி

தென்னாடுடைய சிவனே போற்றி
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
என்று பாடுகிறீர்களே?
பின் ஏன் சிவன் ஆலயத்தின் வாயிலிலே பிற மதத்தவர்கள்
உள்ளே நுழைய அனுமதி கிடையாது என்று தகவல் பலகை வைத்திருக்கிறீர்கள்?
அப்படியானால் அவர்களுக்கு சிவன் இறைவன் கிடையாதா?
அவர்களுக்கு வேறு கடவுள் இருக்கிறாரா?
சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாக இருப்பதால்தான் இந்த(இந்து)மதம் மக்களிடையே குழப்பத்தை உண்டுபண்ணுகிறது.
குருவாயூரிலும் அப்படிதான்
எல்லா உயிரிலும் வாசம் செய்யும் கேசவனை நான் வணங்குகிறேன் என்று தினம்
தினம் மார்தட்டிகொள்ளும் வைணவர்கள் எந்த ஜாதியை சேர்ந்தவனானாலும் அவனில் கேசவன் வாசம் செய்கிறான் என்று ஏன் ஏற்றுகொள்வதில்லை?
மனிதரில் பேதம் பார்ப்பவன் எவனும் இறைவனை உணராதவர்களே
அவனை உணராத காரணத்தினால் அவர்கள் மனம் அவர்கள் சார்ந்துள்ள மதத்தை,மதக்கடவுளை அவர்களுக்கு மட்டும் சொந்தமாக எண்ணுகிறது(சொந்த சொத்து போல்)
எப்போது ஆலயங்களில் உண்மைக்கு மாறான இந்த போலிகள் ஒழிக்கப்படுகின்றவோ அப்போதுதான் உண்மையான தெய்வீகம் மலர்ந்து மக்களிடையே பேதம் ஒழியும்.
//தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று பாடுகிறீர்களே? பின் ஏன் சிவன் ஆலயத்தின் வாயிலிலே பிற மதத்தவர்கள் உள்ளே நுழைய அனுமதி கிடையாது என்று தகவல் பலகை வைத்திருக்கிறீர்கள்? அப்படியானால் அவர்களுக்கு சிவன் இறைவன் கிடையாதா?
அவர்களுக்கு வேறு கடவுள் இருக்கிறாரா?//
திருக்கோயில் என்பது வழிபடும் இடம்; வேடிக்கை பார்க்கும் இடம் அன்று. வழிபட விழைவோர்க்கும் வேடிக்கை பார்க்க விழைவோர்க்கும் வேறுபாடு இல்லையா?
//சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாக இருப்பதால்தான் இந்த (இந்து) மதம் மக்களிடையே குழப்பத்தை உண்டுபண்ணுகிறது.//
மதம் குழப்பத்தை உண்டுபண்ணவில்லை. மதத்தில் சொல்லப்பட்டிருப்பனவற்றுக்கு மாறாகச் செயல்படுபவர்களால்தான் `குழப்பம்’ ஏற்படுகிறது.
வேடிக்கை பார்ர்க்க வருபவன் யார் ,வழிபாடு செய்ய வருபவன் யார் என்பதை அந்த இறைவன்தான் முடிவு செய்ய வேண்டும்
மனிதர்கள் அல்ல.
//அந்த இறைவன்தான் முடிவு செய்ய வேண்டும்
மனிதர்கள் அல்ல.//
எல்லாவற்றையும் இறைவனே முடிவு செய்யவேண்டும் எனின் மனிதனுக்கு அறிவு எதற்கு?
அறிவு அவனை அறிந்துகொண்டு தெளிவதற்கு
அகந்தை கொண்டு அழிவதர்க்கல்ல
அறிவு அற்றம் காக்கும் கருவி
மெய்ப்பொருளை காண உதவுவது அறிவு
அவன் படைப்புகளிடையே பேதம் கண்டு வெறுப்பை விதைக்க அல்ல
அறிவு அனைத்தையும் அன்பால் நேசித்து தானும் ஆனந்தமடைந்து பிறரையும் ஆனந்தத்தில் ஆழ்த்துவது
அன்பு இல்லாத அறிவு அகந்தையில் தள்ளி வாழ்வை வீணாக்கிவிடும்.
//அவன் படைப்புகளிடையே பேதம் கண்டு வெறுப்பை விதைக்க அல்ல//
வெறுப்பை விதைப்பது அறிவன்று; அஃது அறிவென்னும் முகமூடியினுள் இருக்கும் அறியாமை.
//அறிவு அனைத்தையும் அன்பால் நேசித்து தானும் ஆனந்தமடைந்து பிறரையும் ஆனந்தத்தில் ஆழ்த்துவது//
அனவரையும் நேசிக்கவேண்டும் என்பது என்றும் மாறாத உண்மை.
அண்டை அயலாரை நேசிக்கவேண்டும்; தன் வீட்டுக் கதவையும் பூட்டிவைக்கவேண்டும்.
உள்ளத்தில் இறைவனை பூட்டி வைப்பவனுக்கு வெளியில் எதையும் பூட்டி வைக்க வேண்டிய அவசியம் இல்லை
அன்பரே,
வழிபடும் இடங்களைக்கூட பூட்டிவைக்க வேண்டிய காலம் இது.
வழிபடும் பொருளின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் தான்
பூட்டின் மீது நம்பிக்கை வைப்பார்கள்
அனபருக்கு,
நீங்கள் சொல்வதனை நீங்கள் பின்பற்றுவதில் எனக்கேதும் கருத்து வேறுபாடு இல்லை.
பல கோடி மக்கள் வாழும் உலகில் நான் பெற்ற இன்பம் நீங்களும் பெறவேண்டும் என்றுதான் உங்கள் வலைப்பதிவில் என் கருத்துக்களை தெரிவித்தேன்.
முயற்சி செய்து அலகிலா விளையாட்டுடை தலைவனின் ஆனந்தத்தை நீங்களும் அடைந்து இன்புற வேண்டும் என்பது என்னுடைய அவா அவ்வளவுதான்
அன்பருக்கு,
உங்கள் அவா மகிழ்ச்சிக்குரியது. பாராட்டுகள்.