இன்பத்தில் இன்பம்
(திருமுறை விளக்கம்: 13)
வாழ்க்கையில் இன்பம் பல கோடி.
மெய், வாய், கண், மூக்கு, செவி, அறிவு, உள்ளம் எனும் இவைவழி நுகரும் இன்பத்திற்கு அளவில்லை.
மெய்க்கு இன்பம் குழந்தையர் உடல் தீண்டல்.
வாய்க்கு இன்பம் நறுங்கனி உண்ணல்.
கண்ணுக்கு இன்பம் இயற்கைக்காட்சி காணல்.
மூக்குக்கு இன்பம் மலர்மணம் மோத்தல்.
செவிக்கு இன்பம் செந்தமிழ் கேட்டல்.
அறிவுக்கு இன்பம் கல்வி கற்றல்.
உள்ளத்துக்கு இன்பம் அன்பு காட்டல்.
இவை இன்பம்; இன்னும் எத்தனையோ இன்பம்; எவ்வளவோ இன்பம்.
இத்தகைய இன்பத்தை ஒருசேரத் தந்து இதற்கும் மேலான இன்பத்தையும் தரும் பொருள் யாதேனும் உண்டோ?
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே. (5.90.1)
மாசு இல் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கு இளவேனிலும்
மூசு வண்டு அறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணை அடி நீழலே.
`குற்றமில்லாத வீணை, மாலையில் தோன்றும் திங்கள், மென்மையாக வீசும் தென்றல், மிகுந்த இளவேனிற்காலம், வண்டுகள் மொய்த்து ஒலிக்கும் பொய்கை எனும் இவை தரும் இன்பமெல்லாம் ஒருங்கே கலந்தாற்போலும் இன்பத்தைத் தருவது இறைவனாகிய என் தந்தையின் திருவடி அருளாகும்.’
மாசு இல் – இலக்கணக்குற்றம் இல்லாத
மாலை – அந்திப்பொழுது, இரவு
மதியம் – திங்கள்
வீங்கு – மிகுந்த: இன்பம் மிகுந்த
இளவேனில் – பருவகாலங்களுள் ஒன்று
மூசு – மொய்த்து
அறை – ஒலிக்கும்
பொய்கை – குளம்
எந்தை – என் தந்தை
இணையடி – இரண்டு திருவடி
நீழல் – நிழல்: திருவருள்
குற்றமில்லாத வீணையிசை செவிக்கு இன்பம்.
திங்கள் பொழியும் தண்ணொளி கண்ணுக்கு இன்பம்.
மலர்களைத் தழுவி மென்மையாக வீசும் தென்றல் மூக்குக்கு இன்பம்.
இளவேனிற்காலம் மெய்க்கு இன்பம்.
பொய்கையின் தெளிந்த நீர் வாய்க்கு இன்பம்.
ஐம்பொறிகளின்வழி சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனும் ஐம்புல நுகர்வும் தருவதால் இவை யாவும் இன்பமே.
ஐம்புல இன்பம் தருவதால் ஒத்தும் அறிவுக்கும் உள்ளத்துக்கும் இன்பம் தருவதால் மிகுந்தும் விளங்குவது இறைவரின் திருவடி நிழல்.
தண்மை பொருந்தியது நிழல்; நிழலாவது இறையருள்.
உலகியல் இன்பத்தை என்றும் சைவம் புறக்கணித்தது இல்லை.
உலகியல் இன்பத்தைத் தருவதும் அதற்கும் மேலான முற்றின்பத்தைத் தருவதும் திருவருளே என்பது சைவக் கொள்கை.
துன்பத்தைத் தாங்கிக்கொள்ளும் திண்மையும் துன்பத்தை மாற்றியமைக்கும் வண்மையும் பெருகினால் வாழ்வில் இன்பம் பெருகும்.
வாழ்வை எதிர்நோக்க நெஞ்சுக்குத் திண்மையும் வண்மையும் தரும் தண்மை மிகுந்தது “ஈசன் எந்தை இணையடி நீழலே” என்று அருளிச்செய்கிறார் திருநாவுக்கரசர்.
- அ. நம்பி
கருத்துள்ள பாடல், அருமையான விளக்கம், நம்பி ஐயா. “வீணை” எனும் சொல் பல பாடல்களில் வருகின்றது. உதாரணத்துக்கு, கோளறு பதிகத்தின் முதல் பாடலில்
வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்..
என்று ஆரம்பிக்கும். இதில் கூட “வீணை” என்று வருகிறது. அதன் பொருளை விளக்க முடியுமா?
வாருங்கள்.
திருமுறைத் திருப்பாடல்களில் பல இடங்களில் `வீணை’ எனும் சொல் ஆளப்படுகிறது என்பது உண்மை.
பொருளை விளக்கின் பெருகும்; விளக்கிச் சொல்லின் பயனும் பெருகும். தனிக்கட்டுரை எழுத முயல்வேன். இறைவர் அருள்க.
சிவபெருமான் தன் உடல் முழுவதும் பூசிக்கொண்டிருப்பது மாசில்லாத சாம்பலே. எனவே வீணை என்று குறிப்பிடும் இடத்தில சாம்பல் என்று பொருள் கொண்டால் சரியாக இருக்கும் என்று என்ன்னுடைய சிற்றறிவிற்கு தோன்றுகிறது.(வீணை தடவி)
`மிகநல்ல வீணை தடவி…’
தடவுதல் – மீட்டுதல், வாசித்தல்
நரம்பால் ஆன இசைக்கருவிகளை இசைத்தலைத் தடவுதல் என்பர்.
கற்றிலனாயினும் கேட்க-திருவள்ளுவர்
தங்கள் விளக்கத்திற்கு உடன்படுகிறேன்
எனக்கு இந்த அளவுக்கு தமிழ் அறிவு போதாது அய்யா. வாழ்த்துக்கள். ஆனால் நல்ல தமிழ் விருந்து. மெத்த மகிழ்ச்சி அய்யா.
அன்பருக்கு,
//எனக்கு இந்த அளவுக்கு தமிழ் அறிவு போதாது//
நீங்கள் நிறையப் படிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். தொடர்ந்து படியுங்கள்; உங்கள் தமிழறிவு தானே வளரும்; வருந்தத் தேவையில்லை. வாழ்த்துகள்.