கனியில் இனிமை
(திருமுறை விளக்கம்: 07)
காய்ச்சலில் படுத்திருப்பவர்களுக்குக் கனியும் கசக்கும்; கருப்பங்கட்டியும் கசக்கும்.
கசப்பு அவர்கள் நாவில் இருக்கிறது; எனவே இனிப்பும் கசப்பாகத் தெரிகிறது.
உள்ளம், சொல், உடல் எனும் முக்கருவிகளால் இறைவரை வழிபடவேண்டும் என்பார்கள் பெரியவர்கள்.
உள்ளம், சொல், உடல் எனும் இம்மூன்றும் வழிபாட்டுக்குரிய கருவிகள் என்பதே இதன் பொருள்.
வழிபாட்டுக்கு உரிய கருவிகள் தூய்மையாக இருக்கவேண்டும்.
இனியன நினைப்பது உள்ளத் தூய்மைக்கு வழி.
இனியன பேசுவது சொல் தூய்மைக்கு வழி.
இனியன செய்வது உடல் தூய்மைக்கு வழி.
இனியன அனைத்துக்கும் அடிப்படையாவது அன்பு; எனவே அன்பு இனியது என்பது சைவ நெறி.
நினப்பிலும் பேச்சிலும் செயலிலும் அன்பு இருக்குமானால் உள்ளமும் சொல்லும் உடலும் என்றும் தூய்மையாகவே இருக்கும்.
மனிதர் காள்இங்கே வம்மொன்று சொல்லுகேன்
கனிதந் தாற்கனி உண்ணவும் வல்லிரே
புனிதன் பொற்கழல் ஈசன் எனுங்கனி
இனிது சாலவும் ஏசற்ற வர்கட்கே. (5.91.7)
மனிதர்காள் இங்கேவம் ஒன்று சொல்லுகேன்
கனி தந்தால் கனி உண்ணவும் வல்லிரே
புனிதன் பொன் கழல் ஈசன் எனும் கனி
இனிது சாலவும் ஏசு அற்றவர்கட்கே.
`மனிதர்களே, இங்கே வாருங்கள்; ஒன்று சொல்லுவேன். கனி தந்தால் அக்கனியை உண்ணும் வல்லமை உடையவர்கள் நீங்கள். தூயனும் அழகிய திருவடியுடைய இறைவனும் ஆகிய கனி குற்றமற்றவர்களுக்கு மிகவும் இனியது.’
இங்கேவம் – இங்கே வாருங்கள்
சொல்லுகேன் – சொல்லுவேன்
வல்லிரே – வல்லமை உடையவர்கள் நீங்கள்
புனிதன் – தூயன்
பொற்கழல் – அழகிய திருவடி
கனி – பழம்
சாலவும் இனிது – மிகவும் இனியது
ஏசு – குற்றம்
ஏசற்றவர்கள் – குற்றமற்றவர்கள்
ஒப்பிடப்பட முடியாதவர் இறைவர் என்பது சைவ சமயத்தின் முடிவு; முடிந்த முடிவு.
ஒப்பில்லாதவர் இறைவர் என்றே திருமுறை அருளிய மெய்யாசிரியர்கள் கூறுவார்கள்.
ஆனாலும் உலகத்தில் இனிமையானவை என நாம் கருதும் பொருள்கள் பலவற்றோடும் இறைவரை இணைத்தும் சொல்வார்கள்.
“கரும்பு ஒப்பானைக் கரும்பினில் கட்டியை விரும்பு ஒப்பானை (5.3.2) என்பார் திருநாவுக்கரசர்.
“தேன் ஒத்து இனியான்” (1.38.3) என்பார் திருஞானசம்பந்தர்.
“பண்ணிடைத் தமிழ் ஒப்பாய் பழத்தினில் சுவை ஒப்பாய் கண்ணிடை மணி ஒப்பாய் கடுஇருட் சுடர் ஒப்பாய்” (7.29.6) என்பார் திருவாரூரர்.
“தேனாய் இன்னமுதமுமாய்த் தித்திக்கும் சிவபெருமான்” (8.38.10) என்பார் திருவாதவூரர்.
இவ்வாறெல்லாம் மெய்யாசிரியர்கள் கூறுவது அன்பின் மேலீட்டாலும் உலகோர் பொருட்டுமே அன்றி ஒப்பில்லாத இறைவரை ஒப்பிடுவதற்காக அன்று.
“கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி” (6.32.1) என இறைவரைப் போற்றும் திருநாவுக்கரசர் பெருமான் இத்திருப்பாடலிலும் இறைவரைக் கனி என்றே சொல்கிறார்.
இறைவர் எனும் கனி மிகவும் இனிய கனி.
இந்த இனிய கனியை எல்லாராலும் உண்ண முடியும்.
உண்ண அழைக்கிறார் பெருமானார்.
கனி தந்தால் கனியை உண்ண நம்மால் முடியும் என அழைத்துச் சொல்கிறார்.
ஆனாலும் `ஏசு அற்றவர்கட்கே ஈசன் எனும் கனி சாலவும் இனிது’ என்றும் முடிவாகச் சொல்கிறார்.
நாவில் கசப்பிருந்தால் நறுங்கனியும் கசப்பாகத்தான் தோன்றும்.
நினைப்பிலும் பேச்சிலும் செயலிலும் அன்பின்மை இருந்தால் இறைவரை உணர முடியாது; இறையருளின் இனிமையைச் சுவைக்க முடியாது.
அன்பின்மையைக் குற்றம் என்றே குறிப்பிடுகிறார் அப்பர்.
நினைப்பிலும் பேச்சிலும் செயலிலும் அன்பின்மை பொருந்தி நின்றால் எல்லாக் குற்றங்களும் வந்து சேரும்.
எனவே அன்பின்மையே முதற்குற்றமும் பெருங்குற்றமும் ஆகிறது.
அன்பின்மை எனும் குற்றம் அற்றவர்கள் அன்பு உடையவர்கள்.
அன்பு உடையவர்களுக்கே `ஈசன் எனும் கனி சாலவும் இனிது’ என்கிறார் பெருமானார்.
அருங்கனி இருக்கிறது.
அப்பர் பெருமான் அழைக்கிறார்.
அன்புடையவர்கள் உண்ணலாம்; உண்டு மகிழலாம்.
- அ. நம்பி

Vanakham. Valaipativinai meendum thodangiyatarku nandri.
தொடர்ந்து படிக்கும் உங்களுக்கு நன்றியறிதல் உடையேன்.