கடற்கரையில் ஒரு துயரம்
கம்போங் கோலா நெனாசி பகாங் மாநிலத்திலுள்ள ஒரு சிற்றூர்.
திங்கள்கிழமை காலையில் ஒரு திமிங்கிலம் கடற்கரையில் ஒதுங்கிக் கிடந்தது.
அசைவற்றுக் கிடந்த திமிங்கிலத்துக்கு மூச்சியக்கம் இருந்தது; கண்ணசைவும் இருந்தது.
பத்து மீட்டர் (ஏறத்தாழ 33 அடி) நீளமும் மூன்று டன் எடையும் கொண்ட அவ்விலங்கைக் காப்பாற்ற ஊர்மக்கள் பாடுபட்டனர்.
மீண்டும் கடலுக்குள் அதனைக் கொண்டுவிட முயன்றும் முடியவில்லை.
சூட்டைக் குறைக்கத் திமிங்கிலத்தின்மேல் தொடர்ந்து கடல்நீரை ஊற்றிக்கொண்டிருந்தனர்.
செய்தியறிந்த மீன்வளத்துறையினர் திமிங்கிலத்தைக் காப்பாற்ற முனைந்தனர்.
படகுகளைக்கொண்டு அதனை இழுத்துக் கடலில் விட முடிவு செய்தனர்; இரவு மணி பதினொன்றுக்குக் கடலில் விடப்பட்டது.
செவ்வாய்க்கிழமை காலையில் அது மீண்டும் கரையில் ஒதுங்கிக் கிடந்தது.
அதனைக் காப்பாற்றும் முயற்சியை ஊர்மக்கள் மீண்டும் தொடங்கினர்.
திமிங்கிலத்தின்மேல் நீர் ஊற்ற விசைக்குழாயையும் பயன்படுத்தினர்.
அவர்களின் எண்ணம் நிறைவேறவில்லை.
திமிங்கிலத்தின் கண்கள் மூடிக்கொண்டன; வாலிலும் அசைவில்லை.
மக்கள் துயரில் மூழ்கினர்.
இனி நீரூற்றி என்ன பயன்?
அவர்கள் கைகளில் நீர் இல்லை.
கண்களில் நீர்.
- அ. நம்பி
முதலிரு படங்கள்: ராய்ட்டர்ஸ்
அடுத்த படம்: பெர்னாமா
செய்தி:
Sombre mood as beached whale dies – NST
Beached whale draws curious crowd – NST
Three-tonne beached whale found at river mouth – NST