செய்வினை

2008 June 16

bnn

செய்வினை

(திருமுறை விளக்கம்: 01)

நம் வாழ்க்கை ஒரு பயணம்.

ஓர் ஊரிலிருந்து புறப்பட்டு இன்னோர் ஊரை நோக்கிச் செல்வது பயணம்.

கருவூரிலிருந்து புறப்படுகிறோம்.

காட்டூரை நோக்கிப் போகிறோம்.

பயணத்தின் தொடக்கம் நம் கையில் இல்லை; ஆனாலும் பயணம் ஒருநாள் தொடங்கிவிட்டது.

பயணத்தின் முடிவும் நம் கையில் இல்லை; ஆனாலும் பயணம் ஒருநாள் முடியப்போகிறது.

தொடக்கத்துக்கும் முடிவுக்கும் இடைப்பட்ட காலம் நம் கையில் இருக்கிறது; இது நம் வாழ்க்கை.

வாழவேண்டாவா?

`எப்படியோ தொடங்கிவிட்டது. எப்படியோ தொடர்கிறது; தொடரட்டும். எப்படியோ முடியப்போகிறது; முடியட்டும்’ என்று விட்டுவிடலாமா?

இன்பம் வருகிறது; மகிழ்ச்சி அடைகிறோம்.

துன்பம் வருகிறது; சோர்ந்து போகிறோம்.

இதுதானா வாழ்க்கை?

நாம் நுகரும் (அநுபவிக்கும்) இன்பத்துக்கும் துன்பத்துக்கும் காரணத்தைக் கண்டறிய வேண்டாவா?

கண்டறிந்து செயல்பட்டால் இன்பம் பெருகும்; துன்பம் போகும்.

இன்பத்தைப் பெருக்கித் துன்பத்தைப் போக்கி வாழ்வதே வாழ்க்கை.

இப்படித்தான் வாழவேண்டும்.

வாழ்கிறோமா?

அவ்வினைக் கிவ்வினை ஆமென்று சொல்லும் அஃதறிவீர்

உய்வினை நாடா திருப்பதும் உந்தமக் கூனமன்றே

கைவினை செய்தெம் பிரான்கழல் போற்றுதும் நாமடியோம்

செய்வினை வந்தெமைத் தீண்டப் பெறாதிரு நீலகண்டம். (1.116.1)

அவ்வினைக்கு இவ்வினை ஆம் என்று சொல்லும் அஃது அறிவீர்

உய்வினை நாடாது இருப்பதும் உந்தமக்கு ஊனம் அன்றே

கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாம் அடியோம்

செய்வினை வந்து எமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்.

`முன்பு செய்த வினைகளுக்கு ஏற்றவாறே இப்போது நுகரும் துன்பங்களாகிய வினைப்பயன்கள் ஆகிவருகின்றன என்று சான்றோர்கள் அருளிச்செய்யும் மெய்ம்மொழியை நீங்கள் அறிந்துகொண்டிருக்கிறீர்கள். ஆனால் அந்த வினைகளின் தொடர்பிலிருந்து தப்பும் வழியை நாடாமல் இருப்பது உங்களுக்குக் குறைபாடு அன்றோ? இயலும் திருத்தொண்டு செய்து நம் தலைவராகிய இறைவரின் திருவடிகளை அடியவர்களாகிய நாம் போற்றி வணங்குவோம். இவ்வாறு செய்வோமானால் முன்பு நாம் செய்த வினைகள் வந்து நம்மைத் தொடரா. இதற்குத் திருநீலகண்டத்தின்மீது ஆணை.’

அவ்வினை – முன்புசெய்த வினை

இவ்வினை – இப்போது நுகரும் வினைப்பயன்

ஆம் – ஆகிவரும்

உய்வினை – உய்வு, உய்யும் வழி, தப்பும் வழி

உந்தமக்கு – உங்களுக்கு

ஊனம் – குறை, குறைவு, குறைபாடு

அன்றே – அன்றோ

கைவினை – இறைபணி, திருப்பணி, திருத்தொண்டு

எம்பிரான் – நம் தலைவர், இறைவர், சிவபெருமான், எம்பெருமான்

கழல் – கழல் அணிந்த திருவடி, திருவடி: ஆகுபெயர்

செய்வினை – செய்த வினை

எமை – நம்மை

தீண்டப்பெறா – தீண்டா, பற்றா, தொடரா

திருநீலகண்டம் – சிவபெருமானைச் சுட்டும் திருக்குறிப்பு

நாம் செய்யும் செயல்கள் அனைத்துக்கும் விளைவுகள் உண்டு; விளைவு இல்லாத செயல் இல்லை.

நம் செயலே வினை; செயலின் விளைவே வினைப்பயன்.

நாம் செய்யும் செயலின் விளைவை நாமே நுகர்வோம்; நாம் நுகரும் இன்பமும் துன்பமும் நம் வினையின் விளைவான வினைப்பயனே ஆகும்.

இது நம் சமயத்தின் வினைக்கொள்கை; இது நிலையான கொள்கை; இதுவே நிலையான உண்மை.

இந்த நிலையான உண்மையைச் சான்றோர்கள் உறுதியாகச் சொல்லியுள்ளார்கள்; தெளிவாக விளக்கியுள்ளார்கள்.

வினையையும் அதன் விளைவையும் குறித்துச் சான்றோர் அனைவரும் அருளிச் செய்திருப்பனவற்றை ஓரளவேனும் நாம் அறியாது இருப்போமா?

நாம் அறிவோம்; `நாம் அறிவோம்’ என்பதனை எல்லாம் அறிந்த திருஞானசம்பந்தர் பெருமானார் அறிவார்.

“அவ்வினைக்கு இவ்வினை ஆம் என்று சொல்லும் அஃது அறிவீர்” என்கிறார் பெருமானார்.

அறிய வேண்டியவற்றை அறிந்துகொண்டால் மட்டும் போதுமோ? அறிந்துகொண்டவற்றுக்கு ஏற்பச் செயல்பட வேண்டாவோ?

`கற்க வேண்டியவற்றைக் கசடறக் கற்றுக்கொள்ளுங்கள்; கற்றபின் அவற்றுக்கு ஏற்ப நில்லுங்கள்’ என்னும் பேராசானின் கட்டளை நிலையான கட்டளை அன்றோ?

`செய்த வினைகளுக்கு ஏற்றவாறே இப்போது நுகரும் துன்பங்கள் ஆகிவந்துள்ளன என்பதை நீங்கள் அறிவீர்கள்; அறிந்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அந்த வினைத்தொடர்பிலிருந்து தப்பும் வழியை நாடாது இருக்கிறீர்களே! உய்வினை நாடி உங்களின் துன்பத்தை நீக்கிக்கொள்ளாமல் இருக்கிறீர்களே! இது உங்களுக்குக் குறைபாடு அன்றோ?’ எனத் தெளிவாகச் சொல்கிறார் திருஞானசம்பந்தர்.

அறியவேண்டியதை அறிந்திருந்தும் செய்யவேண்டியதைச் செய்யாதிருப்பது குறைதான்; குறைபாடுதான். இந்தக் குறைபாட்டைச் சுட்டி அறிவுறுத்தி நம்மைத் திருத்தி நல்வழியில் செலுத்துவதற்காகவே `ஊனம்’ என்னும் சொல்லை ஆளுகிறார்.

உய்வினை என்ன?

“கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும்” என அருளிச்செய்கிறார் நம் மெய்யாசிரியராகிய ஓதாதுணர்ந்த ஆளுடைய பிள்ளையார்.

வினைத்தொடர்பிலிருந்து தப்புவதற்கு இறைவரின் திருவடிகளைப் போற்றி வணங்கினால் போதுமோ?

`போதாது; கைவினை செய்யவேண்டும்’ என்கிறார் பெருமானார்.

`இறைவழிபாடு செய்வோர் கண்டிப்பாக இறைபணி செய்யவேண்டும்; இறைபணியே திருப்பணி; திருப்பணியே திருத்தொண்டு; திருத்தொண்டு செய்வதே இறைவழிபாட்டின் இலக்கணம்’ என அருளாளர்கள் அனைவரும் அருளிச்செய்வார்கள்.

இவ்வாறு சொல்லும்போது `இறைபணி என்பது யாது’ என்றும் விளக்கி அருளுவார்கள்.

“படமாடக் கோயிற் பகவற்கொன் றீயில்

நடமாடக் கோயில் நம்பர்க்கங் காகா

நடமாடக் கோயில் நம்பர்க்கொன் றீயில்

படமாடக் கோயிற் பகவற்க தாமே”

என அருளிச்செய்வார் நம்பிரான் திருமூலர்.

`இறைவருக்கு என்று செய்யும் பணி இறைவருக்கு மட்டுமே சேரும்; மக்களுக்குச் சேராது. மக்களுக்குச் செய்யும் பணி மக்களுக்கும் சேரும்; இறைவருக்கும் சேரும்’ என்பது இத்திருமந்திரத்தின் சுருங்கிய பொருள். (படமாடக் கோயில் பகவன் – இறைவர், நடமாடக் கோயில் நம்பர் – மக்கள்)

மக்களுக்குச் செய்யும் பணி இறைபணியே ஆகும்; மக்கள் பணி இறைபணி; மக்கள் பணி திருப்பணி.

மக்களுக்குச் செய்யும் தொண்டு இறைவருக்குச் செய்யும் திருத்தொண்டு என்பது நம் சமயத்தில் என்றும் உள்ள கொள்கை.

“என் கடன் பணிசெய்து கிடப்பதே” என்னும் அப்பர் பெருமானார்தம் அருள்மொழி இக்கொள்கையைத் தெளிவாக விளக்கும்.

இறைபணியாகிய மக்கள் பணியை மூன்று வழிகளில் செய்யவேண்டும் என்கிறது நம் சமயம்.

நல்லனவற்றையே எண்ணவேண்டும்; இது எண்ணத்தால் ஆகும் இறைபணி.

நல்லனவற்றையே பேசவேண்டும்; இது சொல்லால் ஆகும் இறைபணி.

நல்லனவற்றையே செய்யவேண்டும்; இது செயலால் ஆகும் இறைபணி.

நல்லனவற்றை எண்ணுபவர்கள் நல்லனவற்றையே பேசுவார்கள்; நல்லனவற்றையே செய்வார்கள். மூன்று வழிகளில் ஆகும் இறைபணிக்கு அடிப்படையாக அமைவது எண்னம்; எண்ணத்தின் மிகத் தெளிவான வெளிப்பாடு செயல்.

செயலால் ஆகும் இறைபணியையே `கைவினை’ என்னும் சொல்லால் குறித்தருளுகிறார் திருஞானசம்பந்தர்.

`மக்களுக்குத் தொண்டு செய்யுங்கள்; மக்களுக்குத் தொண்டுசெய்து இறைவரை வழிபடுங்கள்’ என அருளிச்செய்கிறார் பெருமானார்.

தனிமனிதர் ஒவ்வொருவரும் தொண்டு செய்யவேண்டும்.

எல்லாராலும் தொண்டுசெய்ய முடியுமோ?

முடியும்; நம்மால் முடிந்ததைச் செய்வதே தொண்டு.

ஒவ்வொருவரும் தம்மால் இயன்றதைச் செய்யவேண்டும்; கட்டாயம் செய்யவேண்டும்.

இயன்றதைச் செய்வது தொண்டு; இது மக்களுக்கும் இறைவருக்கும் செய்யும் தொண்டு.

இயன்றதைச் செய்யாது இருப்பது குற்றம்; இது மக்களுக்கும் இறைவருக்கும் செய்யும் குற்றம்.

மக்களுக்குத் தொண்டு செய்வதும் இறைவழிபாடு செய்வதும் இணைந்து போகவேண்டும்; இரண்டையும் நம் வாழ்க்கை முறையாகக் கொள்ளவேண்டும்.

இவ்வாறு செய்வோமானால் “செய்வினை வந்து எமைத் தீண்டப்பெறா” எனத் தெள்ளத் தெளிவாகவும் உறுதியாகவும் மொழிகிறார் அருள்ஞானசம்பந்தர்.

தொண்டுசெய்து இறைவரைத் தொழுவோமானால் முன்பு நாம் செய்த வினைகள் வந்து நம்மைத் தீண்டா என்பது உறுதி.

`பழைய வினைகளின் தொடர்பு நீங்கவேண்டும் என விரும்புபவர்களாகிய நீங்கள் தொண்டுசெய்து இறைவரைத் தொழுது பணியுங்கள்’ என அருளரசராகிய திருநாவுக்கரசரும் அருளிச்செய்வார்.

“தொண்ட ராகித் தொழுது பணிமினோ

பண்டை வல்வினை பற்றற வேண்டுவீர்”

என்பது அப்பர்பிரான் மெய்ம்மொழி.

துன்பம் தொலையவும் இன்பம் பெருகவும் நம் சமயம் வழிகாட்டுகிறது.

மக்கள் பணியும் இறைவழிபாடும் இயைதல் நம் சமயம் சமயம் காட்டும் எளிய வழி; இனிய வழி.

`திருநீலகண்டம்’ என ஆணையிட்டு அருளுகிறார் பெருமானார்.

பெருமானாரின் ஆணையை நாம் உச்சிமீதில் கொள்ளவேண்டும்.

கடவுளைத் தொழுவோம்; கைவினை செய்வோம்; செய்வினை நீங்கும்; துன்பம் போகும்; இன்பம் பெருகும்.

இறைவர் அருள்வார்.

- அ. நம்பி

10 Responses leave one →
  1. 2008 June 16

    சிந்தனையை தூண்டக்கூடிய கட்டுரைக்கு நன்றி. ஒரு இடத்தில் மட்டும் சிறிது ஐயம் உள்ளது. எல்லா செயல்களுக்கும் காரணம் இறைவன் அல்லவா? அப்ப‌டி பார்த்தால் தீய‌ செய‌ல்க‌ளுக்கும் கார‌ண‌மான‌வ‌ன் இறைவ‌ன் அல்ல‌வா? நீங்கள் கூறியது போல,

    //நம் செயலே வினை; செயலின் விளைவே வினைப்பயன்//

    என்ப‌து இத‌ற்கு நேர்மாறாக‌ உள்ள‌தே! பிற‌கு தீவினைக‌ளுக்கான‌ ப‌ய‌ன்க‌ளை ம‌னித‌ன் அனுப‌விக்க‌ வேண்டும் என்று ஏன் இறைவ‌ன் விரும்புகிறான்?

    வெகு நாட்க‌ளுக்கு பிற‌கு ஒரு ந‌ல்ல‌ க‌ட்டுரையை ப‌டித்த‌ திருப்தியை பெற்றேன்.

  2. 2008 June 16

    நண்பருக்கு,

    கட்டுரை குறித்துக் கருத்து உரைத்தமைக்கு நன்றியறிதல் உடையேன்.

    தங்கள் ஐயத்துக்கு விளக்கம் உண்டு. விரைவில் தனிக்கட்டுரை எழுதுவேன்.

  3. 2008 November 18
    tvthangamaNi. permalink

    மிக அழகாக,மிகஎளிதாக
    விளங்கிக் கொள்ள,உயர்ந்த எடுத்துக் காட்டுகள்
    கொடுத்துச் சிறப்புடன் அளித்த உங்கள்
    கட்டுரைக்கு என் நன்றி!

    அன்புடன்,
    தங்கமணி.

  4. 2008 November 18

    மெய்யாசிரியர்தம் திருப்பாடல்களை விளக்க முயன்று எழுதினேன்; நீங்கள் சொல்வதுபோல் கட்டுரை அமைந்திருக்குமாயின் அது திருப்பாடலின் மேன்மையால் அமைந்தது என்க.

    இன்னும் எழுதும் எண்ணமுண்டு.

    உங்கள் கருத்துக்கு நன்றியறிதல் உடையேன்.

  5. 2009 November 15
    ராஐன்ராமன். permalink

    மக்கள் பணியும் இறைவழிபாடும் இயைதல் நம் சமயம் சமயம் காட்டும் எளிய வழி; இனிய வழி.

    ஒரு ந‌ல்ல‌ க‌ட்டுரையை ப‌டித்த‌ திருப்தியை பெற்றேன்.

    அன்புடன்,

    ராஐன்ராமன்.

  6. 2009 November 15

    அன்பருக்கு,

    வாருங்கள் ஐயா.

    வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.

  7. 2009 November 16
    சி .நா.மணியன் permalink

    இறைவன் என்ற ஒன்றை தவிர எனக்கு மற்ற எந்த கருத்திலும் வேறுபாடு கிடையாது. பகுத்தறிவு படைத்த மனிதனாக வாழ்வோம். நல்லதே நினைப்போம், நல்லதே செய்வோம். இப்படி நடந்து விட்டால் இந்த உலக மாந்தர்கள் எல்லோரும்
    நிம்மதியாக வாழலாம். நல்ல சிந்தனையை ஏற்படுத்தக்கூடிய வரைவு. மிகவும் மனதுக்கு சுகமாக இருக்கிறது.

  8. 2009 November 16

    அன்பருக்கு,

    //இறைவன் என்ற ஒன்றை தவிர…//

    ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் இப்படித்தான் ஒருவன் பேசிக்கொண்டிருந்தான். அவனுக்கு அப்போது வேறு பெயர்; இப்போது அவன் பெயர் அ. நம்பி.

    வாழ்க; வளர்க.

  9. 2009 November 21

    தாங்கள் என்ன சொல்கிறீர்கள் ! நாம் துன்பம் அனுவப்பிதற்கு தாம் தான் காரணம் என்கிறாரா ? அல்ல இறைவன் காரணம் என்கிறாரா? ஞானசம்மந்தர் !

  10. 2009 November 22

    அன்பருக்கு,

    வாருங்கள் ஐயா.

    //தாங்கள் என்ன சொல்கிறீர்கள் ! நாம் துன்பம் அனுவப்பிதற்கு தாம் தான் காரணம் என்கிறாரா ? அல்ல இறைவன் காரணம் என்கிறாரா? ஞானசம்மந்தர் !//

    `அவ்வினைக் கிவ்வினை ஆமென்று சொல்லும் அஃதறிவீர்’ – இது திருஞானசம்பந்தர் அருள்மொழி.

    பொருள்:

    `முன்பு செய்த வினைகளுக்கு ஏற்றவாறே இப்போது நுகரும் துன்பங்களாகிய வினைப்பயன்கள் ஆகிவருகின்றன என்று சான்றோர்கள் அருளிச்செய்யும் மெய்ம்மொழியை நீங்கள் அறிந்துகொண்டிருக்கிறீர்கள்.’

    விளக்கம்:

    `நாம் செய்யும் செயலின் விளைவை நாமே நுகர்வோம்; நாம் நுகரும் இன்பமும் துன்பமும் நம் வினையின் விளைவான வினைப்பயனே ஆகும்.

    இது நம் சமயத்தின் வினைக்கொள்கை; இது நிலையான கொள்கை; இதுவே நிலையான உண்மை.’

    கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்டவை இவை.

    நம் வினைப்பயனுக்கு நாமே காரணம்; இறைவர் அல்லர்.

    வரவுக்கும் கருத்துக்கும் நன்றியறிதல் உடையேன்.

Leave a Reply

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS