பொருளடக்கத்திற்கு தாவுக

காக்கைக்கே இரையாகி…!

ஜூன் 25, 2010

crw01

யிர் செம்மையாக இருக்கவேண்டுமாயின் உடல் செம்மையாக இருக்கவேண்டும்; உடல் செம்மையாக இருக்கவேண்டுமாயின் உணவு உட்கொள்ள வேண்டும்.

உணவு உட்கொள்ள வேண்டுமாயின் உணவு தேடவேண்டும்; உணவு தேடவேண்டுமாயின் உழைத்துத்தான் ஆகவேண்டும்.

இதனை நம் சமயம் கட்டாயம் என்றே சொல்கிறது.

ஆயினும் உடலுக்கு உணவு தேடுவதே வாழ்க்கை ஆகிவிடுமோ?

பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார்
நாக்கைக் கொண்டரன் நாமம் நவில்கிலார்
ஆக்கைக் கேயிரை தேடி யலமந்து
காக்கைக் கேயிரை யாகிக் கழிவரே.
(5.90.5)

பூக் கைக்கொண்டு அரன் பொன்னடி போற்றிலார்
நாக்கைக் கொண்டு அரன் நாமம் நவில்கிலார்
ஆக்கைக்கே இரை தேடி அலமந்து
காக்கைக்கே இரையாகிக் கழிவரே.

`பூக்களைக் கையில்கொண்டு சிவபெருமானின் பொன்னார் திருவடிகளைப் போற்றாதவர்களும் நாக்கைக்கொண்டு இறைவனின் திருப்பெயரைக் கூறாதவர்களும் தம் உடலுக்கே உணவு தேடி அலைந்து இறுதியில் காக்கைகளுக்கே இரையாகிக் கழிவார்கள்.’

போற்றிலார் – போற்றாதவர்கள்
அரன் – சிவபெருமான்
நவில்கிலார் – சொல்லாதவர்கள்
ஆக்கை – உடல்
அலமந்து – அலைந்து; வருந்தி
கழிவர் – அழிந்தொழிவார்கள்

`இரை’ என்னும் சொல் பொதுவாக விலங்குகள், பறவைகள் முதலியவற்றின் உணவைக் குறித்தாலும் சிறப்பாகப் பறவைகளின் உணவையே குறிக்கும்.

நாள் முழுதும் இரை தேடுவது பறவைகளின் இயல்பு; உணவு தேடுவதற்காகவே வாழ்பவர்களை `ஆக்கைக்கே இரைதேடி அலமந்து’ எனும் தொடரால் குறிக்கிறார் அப்பர் பெருமானார்.

உடலுக்கு மட்டும் உணவு தேடினால் போதுமோ?

உயிருக்கும் உணவு வேண்டாவோ?

உயிருக்கு உணவாவது இறை வழிபாடு.

`உடலுக்கு உணவு தேடுங்கள்; ஆனால் உடலுக்கு மட்டுமே உணவு தேடாதீர்கள்; உயிருக்கும் உணவு தேடுங்கள்’ என்று அருளிச்செய்கிறார் பெருமானார்.

- அ. நம்பி

கோவைக்கூத்து…!

ஜூன் 23, 2010

pku01

“பாவைக்கூத்து என்றால் தெரியும்; என்ன அது கோவைக்கூத்து?”

“சரி, பாவைக்கூத்து என்றால் என்ன?”

“பொம்மலாட்டம்!”

“பொம்மலாட்டம் என்றால்…?”

”பொம்மைகளை ஆட்டுவித்து நடத்தப்படும் கூத்து!”

plu03

“சரி!”

“சரி என்றால்…?”

”கோவைக்கூத்து என்பது இன்னொரு விதப் பாவைக்கூத்து!”

”இன்னொரு விதப் பாவைக்கூத்து என்றால்…?”

”கோவைக்கூத்து என்பதும் பொம்மலாட்டம்தான்!”

“அப்படி என்றால் கோவைக்கூத்தும் பாவைக்கூத்தும் ஒன்றுதானா?”

“ஒன்றுதான்! ஆனாலும் வேறுபாடுகள் உள்ளன!”

“என்ன வேறுபாடுகள்?”

”பாவைக்கூத்து நடத்த அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ ஆகும்; ஆனால் கோவைக்கூத்துக்கு ஐந்து நாள் தேவைப்படும்.”

“சரி, வேறு…?”

“பாவைக்கூத்துக்குச் செலவு குறைவு; கோவைக்கூத்து நடத்த நானூறு, ஐந்நூறு கோடி செலவாகும்!”

”ஆமாம், கோவைக்கூத்து என்று பெயர் வரக் காரணம் என்ன?”

“பல கூத்துக்களைத் தொகுத்துக் கோவையாக ஐந்து நாள் தொடர்ந்து கூத்து நடத்தப்படுவதால் கோவைக்கூத்து என்று ஆயிற்று!”

”ஆமாம், கேட்க மறந்துவிட்டேன்; பாவைக்கூத்து நடத்துவதுபோல் யார் வேண்டுமானாலும் கோவைக்கூத்து நடத்த முடியுமா?”

“முடியாது! மாமன்னர்களால் மட்டுமே கோவைக்கூத்து நடத்த முடியும்!”

”அப்படியா? கோவைக்கூத்துக் குறித்து மேலும் விவரங்கள் வேண்டுமே…!”

“மேலும் விவரங்களா…? முன்பே எழுதியதுதான்! ஆனால் இப்போது ஒரே கோப்பில் படிக்கலாம்!”

1. ஒரே கோப்பில் படிக்க:  இங்கு (நீளம் கூடிய கோப்பு; திறக்கச் சற்று நேரமாகும்; படியிறக்கம் செய்து படிப்பது நன்று.) கோப்பின் அளவு குறைக்கப்பட்டுள்ளது; விரைவில் படியிறக்கம் செய்துகொள்ளலாம்.

2. ஏழு பகுதிகளாகப் படிக்க: இங்கு

- அ. நம்பி

 

அம்மை யார் எனக்கு…?

ஜூன் 16, 2010

aas01

ருணீக்கியார் (திருநாவுக்கரசர்) சிறுவராய் இருக்கும்போதே பெற்றோர்களை (புகழனார், மாதினியார்) இழக்கிறார்; தமக்கையாராகிய திலகவதியாரின் ஆதரவில் வாழ்கிறார்.

திலகவதியாரை மணந்துகொள்ளப் பெற்றோர்களால் உறுதி செய்யப்பெற்ற கலிப்பகையார் போர்க்களத்தில் உயிர்துறக்கிறார்; திலகவதியாரும் உயிர்துறக்க முடிவு செய்கிறார்.

“பெற்றோர்களை இழந்த நான் தங்களால் வாழ்ந்துவருகிறேன்; தாங்கள் உயிர்துறப்பதானால் தங்களுக்கு முன்னர் நான் உயிர்துறப்பேன்" என மருணீக்கியார் திலகவதியாரை வணங்கி அழுது வருந்துகிறார்.

“தம்பியார் வாழவேண்டும்; எனவே தாமும் உயிர்வாழ வேண்டும்" என உறுதி கொள்கிறார் திலகவதியார்; தம்பியாரைப் பேணி வளர்க்கிறார்.

எம்மை யாரிலை யானும் உளேனலேன்
எம்மை யாரும் இதுசெய வல்லரே
அம்மை யாரெனக் கென்றென் றரற்றினேற்கு
அம்மை யாரைத்தந் தாராரூர் ஐயரே.
(5.7.6)

எம்மை யார்இலை யானும்உ ளேன்அலேன்
எம்மை யாரும் இதுசெய வல்லரே
அம்மை யாரெனக்கு என்றென்று அரற்றினேற்கு
அம்மை யாரைத்தந் தார்ஆரூர் ஐயரே.

`எம் தாயாரும் தந்தையாரும் இலர்; நானும் பிள்ளைப் (பருவத்தினன் ஆதலால் தனித்து வாழும் திறன்) உள்ளவன் அல்லேன்; என் தமக்கையாரும் என்னைப் பேணி வளர்க்க வல்லவரே ஆவார். (ஆயினும் தமக்கையார் உயிர்துறக்கத் துணிந்தமையால்) “எனக்குத் தாய் யார்" என்று பன்முறை கதறிய அடியேனுக்குத் திருவாரூர் இறைவர் தாயாரைத் தந்து அருளினார்.’

எம்மையார் – எம் ஐயார்: பெற்றோர்: ஐயர் என்பது ஐயார் என நீண்டது.
இலை – இல்லை; இலர்
உளேன் அலேன் – உள்ளேன் அல்லேன்
எம்மையார் – எம் ஐயார்: மூத்தவர்: தமக்கையார்
அம்மை யார் – தாய் யார்; தாயார் யார்
அரற்றினேற்கு – அரற்றிய எனக்கு: அரற்றுதல்: அழுதல், கதறுதல்
அம்மையாரை – தாயாரை
ஆரூர் – ஊரின் பெயர்; திருவாரூர்
ஐயர் – தலைவர்: இறைவர்

“எனக்குத் தாயார் யார் என்று கதறினேன்; எனக்குத் தாயாரைத் தந்தார் இறைவர்" என அப்பர் பெருமானார் தம் இளமைக்கால நிகழ்ச்சியை இத்திருப்பாடலில் குறித்தருளுகிறார்.

தாயாரையும் தந்தையாரையும் ஒருங்கே இழந்த பெருமானர், `அம்மை யார் எனக்கு’ என்று அழுததாகச் சொல்கிறார்; `தாய் தந்தை இருவரிலும் பிள்ளையின் அகவளர்ச்சிக்கும் புறவளர்ச்சிக்கும் மிக மிக முக்கியமானவர் தாய். தாயின் இடத்தை நிரப்புவது தந்தைக்கு அரிது; ஆனால் தந்தையின் இடத்தை நிரப்புவது தாய்க்கு எளிது’ என்பது இதனால் தெளிவாகும்.

மருணீக்கியாரைத் தாயாகவும் தந்தையாகவும் காத்து வளர்த்தவர் திலகவதியார்; பின்னாளில் தருமசேனராக விளங்கிய மருணீக்கியாரைத் திருவைந்தெழுத்து  ஓதித் திருநீறு அளித்துச் சைவராக்கிய மெய்யாசிரியரும் ஆவார்.

atk03

`அம்மையாரைத் தந்தார்’ என்பதன்வழி அப்பர் பெருமானார் திலகவதியாரைத் தாயாகவே  சொல்கிறார். தாயாகவும் தந்தையாகவும் மெய்யாசிரியராகவும் நட்பாகவும் உறவாகவும் விளங்கிய தமக்கையாரைக் குறிக்க `அம்மை’ எனும் சொல்லைவிட மேன்மையான சொல் தமிழில் இல்லை ஆதலால் தமக்கு முன்பிறந்த சைவ மாமணியை `அம்மை’ என்றே குறித்தருளுகிறார் தமிழரசர்.

`தந்தையின் இடத்தைத் தாய் நிரப்புவார்; தாயின் இடத்தைத் தமக்கை நிரப்புவார்’ என்கிறார் அப்பர்.

தாய்மை பொலியும் பெண்டிரைப் பெருமானார் எந்த அளவு மதித்துப் போற்றுகிறார் என்பது இதனால் தெளிவாகப் பெறப்படும். சைவப் பேரரசர் ஆகிய திருநாவுக்கரசர் பெருமானார் பெண்மையைப் போற்றுகிறார் எனில் சைவ சமயமே பெண்மையைப் போற்றுகிறது என்றுதான் பொருளாகும்.

பெற்றோரை இழந்த மருணீக்கியாருக்குத் தாயாகத் திலகவதியாரைத் தந்தருளுகிறார் இறைவர்; சைவ உலகுக்கு ஒளிவிளக்காகத் திருநாவுக்கரசரைத் தந்தருளுகிறார் சைவத் தாயான திலகவதியார்.

சிவபெருமானின் அருட்கொடை திலகவதியார்.

திலகவதியாரின் அருட்கொடை திருநாவுக்கரசர்.

- அ. நம்பி

மலரே பொன்னாக, மலரே கையாக…!

ஜூன் 4, 2010

mpa01 mpa02

கொன்றை மரங்கள் கிளைபரப்பி வளர்ந்து நிற்கின்றன.

கிளைகளில் பொன்னிறத்தில் கொன்றை மலர்கள்; சரஞ்சரமாக அழகு பரப்புகின்றன.

அருகே காந்தள் கொடிகள்; அழகிய மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன

மெல்லத் தவழ்ந்து வருகிறது இளங்காற்று.

கொன்றை மரங்கள் மலர்களைச் சொரிகின்றன.

காந்தள் கொடிகள் கைபோன்ற தம் மலர்களால் பொன்போலும் கொன்றை மலர்களை ஏந்திக் கொள்கின்றன.

இந்தக் காட்சியைப் பார்க்கிறது ஒரு வண்டு.

இசைவாணருக்குப் பொன் ஈந்து புரக்கும் தமிழர் மரபு அந்த வண்டுக்குத் தெரியும்.

காந்தள் கொடிகள் மலர்களால் ஏந்திக்கொண்டிருக்கும் பொன்னைப் பரிசிலாகப் பெற்றுக்கொள்ள எண்ணுகிறது வண்டு.

உடனே இன்னிசை பாடத் தொடங்குகிறது.

முல்லையும் குறிஞ்சியும் மயங்கிய செழிப்பான அந்த நிலத்தில் வண்டின் இசை இயற்கையோடு இயைந்து ஒலிக்கிறது.

மின்காட்டுங் கொடிமருங்குல் உமையாட் கென்றும்
     விருப்பவன்காண் பொருப்புவலிச் சிலைக்கை யோன்காண்
நன்பாட்டுப் புலவனாய்ச் சங்க மேறி
     நற்கனகக் கிழிதருமிக் கருளி னோன்காண்
பொன்காட்டக் கடிக்கொன்றை மருங்கே நின்ற
     புனக்காந்தள் கைகாட்டக் கண்டு வண்டு
தென்காட்டுஞ் செழும்புறவின் திருப்புத் தூரில்
     திருத்தளியான் காண்அவனென் சிந்தை யானே. (6.76.3)

பொன்காட்டக் கடிக்கொன்றை மருங்கே நின்ற
     புனக்காந்தள் கைகாட்டக் கண்டு வண்டு
தென்காட்டுஞ் செழும்புறவின்……

(மணம் மிகுந்த கொன்றை மலர்கள் பொன்னின் நிறத்தைக் காட்டுகின்றன; அருகே மலர்ந்து நிற்கும் காந்தள் மலர்கள் கைகளின் வடிவத்தைக் காட்டுகின்றன; இவற்றைக் கண்டு வண்டு இசை பாடுகிறது. `கொன்றை சொரியும் பொன்னைக் காந்தள் கையேந்தி வாங்க வண்டு இசை பாடுகிறது’ எனப் பொருள்படும்.)

கடி – மணம்
மருங்கே – அருகே
புனம் – மேட்டுநிலம்
தென் – இசை
செழும் – செழிப்பான, வளமான
புறவு – முல்லை, குறிஞ்சி, முல்லையும் குறிஞ்சியும் மயங்கிய நிலம்

திருநாவுக்கரசர் திருப்பாடலில் ஓர் இனிய காட்சி.

(வளமை – 05.11.2009)

- அ. நம்பி

 

நாறறிவு வேண்டா…!

ஜூன் 2, 2010

ats02

ஒன்றே நினைக்கின்றோம் ஓரறிவோ ஈரறிவோ
நன்றே அதுபோதும் நாம்வாழ! – என்றென்றும்
ஆறறிவு வேண்டா! அட,மகனே, மாந்தர்தம்
நாறறிவு வேண்டா நமக்கு!

(நனவுகள் – 22.10.2008)

- அ. நம்பி

Follow

Get every new post delivered to your Inbox.

Join 41 other followers